2012-03-07 15:56:17

காங்கோ நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


மார்ச்,07,2012. ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
காங்கோ ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Louis Portella Mbuyuவுக்கு திருத்தந்தையின் அனுதாபங்களைத் தாங்கிய இத்தந்தியைத் திருப்பீடச் செயலர் தர்சிசியோ பெர்தோனே, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளார்.
இத்துயர நிகழ்வில் தலத் திருஅவை ஆற்றிவரும் சேவைகளைத் திருத்தந்தை தன் தந்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டு, அவர்களுக்கும், பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் தன் சிறப்பு அசீரையும் வழங்கியுள்ளார்.
காங்கோ நாட்டின் தலைநகரான Brazzavilleல் உள்ள ஓர் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தால் 146 இறந்தனர் என்றும் 1500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் Misna கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் இப்புதனன்று அறிவித்தது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தகுந்த மருத்துவ உதவிகள் இல்லாதச் சூழலே அந்நாட்டில் நிலவும் பெரும் அவசர நிலை என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.