2012-03-07 15:56:31

காங்கோ நாட்டின் தலத் திருஅவை செய்துவரும் துயர்துடைப்புப் பணிகளைப் பாவையிட்ட திருப்பீடத் தூதர்


மார்ச்,07,2012. காங்கோ நாட்டில் உள்ள தலத் திருஅவை அதிக வளங்கள் நிறைந்த திருஅவை இல்லையெனினும், தன்னிடம் உள்ள அனைத்தையுமே தேவையில் உள்ளவர்களுக்கு வழங்குவதைக் காணும்போது மகிழ்வாக உள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த ஞாயிறன்று காங்கோ தலைநகர் Brazzavilleல் உள்ள ஓர் ஆயுதக் கிடங்கில் நிகழ்ந்த விபத்தையடுத்து, நான்கு நாட்களாக அந்நகரில் நடைபெறும் பல துயர்துடைப்புப் பணிகளைப் பாவையிட்ட அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Jan Romeo Pawlowski, தலத் திருஅவையின் பணிகளைப் பாராட்டிப் பேசினார்.
ஆயுதக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட இந்த விபத்தினால் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்து வேறுபட்ட தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன என்று கூறிய திருப்பீடத் தூதர், இப்பகுதியில் நிலவும் வெப்பத்தால், தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
காங்கோ நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், அண்மைய நாடுகளில் இருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்திருக்கும் மக்களும் இந்தத் துயர நிகழ்வால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பீடத் தூதர் பேராயர் Pawlowski, சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.