2012-03-07 15:58:06

உணவு முறைகள் உலகமயமாக்கப்பட்டுள்ளது நலவாழ்வுக்கு ஆபத்தாக அமைந்துள்ளது - ஐ.நா. உயர் அதிகாரி


மார்ச்,07,2012. உணவு முறைகள் உலகமயமாக்கப்பட்டுள்ளதும், மேற்கத்திய வாழ்க்கை முறை உலகெங்கும் பரவி வருவதும் நலவாழ்வுக்கு ஆபத்தாக அமைந்துள்ளது என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், உணவு உரிமை குழுவின் அதிகாரி Olivier De Schutter, அறிக்கையொன்றை இச்செவ்வாயன்று சமர்பித்தபோது இவ்வாறு கூறினார்.
உலகமயமாக்கல் என்ற போக்கினால், இன்று உலகில் 100 கோடிக்கும் அதிகமானோர் உணவின்றி மெலிந்திருப்பதும், 100 கோடிக்கும் அதிகமானோர் அதிக உணவால் பெருத்திருப்பதும் ஏற்றுகொள்ள முடியாத அநீதி என்று De Schutter சுட்டிக் காட்டினார்.
நகரமயமாக்கல், பல்பொருள் அங்காடிகளின் பெருக்கம், மேற்கத்திய உணவுப் பொருட்களின் படையெடுப்பு ஆகிய காரணங்களால், ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய உணவு பழக்கங்கள் குறைந்துள்ளன என்றும், இதனால் நலவாழ்வில் ஆபத்தை விளைவிக்கும் பாதிப்புக்கள் உருவாகிவருகின்றன என்றும் ஐ.நா. அதிகாரி தெரிவித்தார்.
மேற்கத்திய உணவு வகைகளால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்ற எச்சரிக்கையையும் விடுத்தார் ஜ.நா. உணவு உரிமை குழுவின் அதிகாரி Olivier De Schutter.








All the contents on this site are copyrighted ©.