2012-03-07 15:57:27

இயேசு அணிந்து வந்த ஆடை ஜெர்மனியில் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்


மார்ச்,07,2012. இயேசு அணிந்து வந்த ஆடை என்று கருதப்படும் ஒரு புனிதப் பொருள் வருகிற ஏப்ரல் மற்றும் மேமாதங்களில் ஜெர்மனியில் Trier பேராலயத்தில் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்போது, அந்தத் திருப்பயண நிகழ்வில் கலந்துகொள்ள திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellet செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.” என்று யோவான் நற்செய்தியில் (19: 23-24) குறிப்பிடப்பட்டுள்ள இந்த அங்கி Trier நகரில் இருந்த ஆயர் புனித Agriziusக்குப் பேரரசன் கான்ஸ்டன்டைனின் அன்னை புனித ஹெலெனா அவர்களால் பரிசாக வழங்கப்பட்டது என்பது மரபு.
இந்த அங்கி 1512ம் ஆண்டு முதன் முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வந்துள்ளது. இந்த நிகழ்வின் 500ஆம் ஆண்டைச் சிறப்பிக்கும் வண்ணம், ஏப்ரல் 13ம் தேதி முதல் மேமாதம் 13ம் தேதி வரை இந்த அங்கி மீண்டும் ஒருமுறை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
இந்த அங்கி 1996ம் ஆண்டு கடைசி முறையாக திறந்துவைக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் Trier பேராலயத்திற்கு வந்தனர் என்று கூறிய ஆயர் Stephan Ackermann, இந்த ஐந்நூறு ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் கத்தோலிக்க விசுவாசத்தைப் புதுப்பிக்கும் ஒரு தருணமாக அமையும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.