2012-03-06 15:14:31

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 106


RealAudioMP3 குருத்துவ வாழ்விலும் சரி, துறவற வாழ்விலும் சரி வருடத்திற்கு ஒருமுறை ஐந்து அல்லது ஏழு நாட்கள் என ஆண்டு தியானம் நடைபெறும். ஒரு சில ஆண்டு தியானங்களில் எங்களை வழிநடத்திய அருட்பணியாளர்கள் “வாழ்நாள் முழுவதற்குமான ஒப்புரவு அருட்சாதனம் பெறுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் மாதத்திற்கு இரு முறை ஒப்புரவு அருட்சாதனம் பெறுகிறோம். “பிறகு எதற்கு இந்த வாழ்நாள் முழுவதற்குமான ஒப்புரவு அருட்சாதனம்” என நினைத்திருக்கிறேன். அதன் பொருள் அப்போது புரியவில்லையெனினும் மாணவப்பருவமாகையால் சொன்னபடியே செய்திருக்கிறேன். ஆனால் நாம் இன்று சிந்திக்கும் திருப்பாடல் 106 அதன் பொருளை எனக்கு புரிய வைத்திருக்கிறது. இத்திருப்பாடல் ஆபிரகாமில் துவங்கி மோசே வரையிலான வரலாற்றைச் சொல்கின்றது. இத்திருப்பாடலின் வழியாக இஸ்ரயேல் மக்கள் தங்களைச் சிறு குழந்தையைப் போல கைபிடித்து நடத்திச்சென்ற யாவே இறைவனை மறந்து சென்றத் தருணங்களையும், ஒரு தந்தையாக இருந்து தன் குழந்தை இஸ்ரயேல் செய்த தவற்றையெல்லாம் இறைவன் பொறுத்துக் கொண்டத் தருணங்களையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர். இத்திருப்பாடலை முழுவதுமாக வாசித்துச் சிந்திக்கும் போது நம் வாழ்வில் இறைவன் செய்த அனைத்தையும் நம் கண்முன் கொணர்கிறது. அதோடு நம் பாவ வாழ்க்கையையும் நம் கண்முன் நிறுத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இத்திருப்பாடல் நாட்டு மக்கள் அனைவருக்குமான பாவ அறிக்கை போன்று அமைந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இத்திருப்பாடலின் மையக்கருத்தான “திரும்ப, திரும்ப மன்னித்து ஏற்றுக்கொண்டாலும், திரும்ப திரும்ப பாவம் செய்த இஸ்ரயேல் மக்களின் மனநிலை” ஆபிரகாம் முதல் மோசே வரை வாழ்ந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, மாறாக 21ம் நூற்றாண்டின் முதல்பகுதியில் வாழ்கின்ற நம் தலைமுறைக்கும் மிகச்சரியாகப் பொருந்துகிறது. ஆண்டிற்கொரு முறையாவது ஒப்புரவு அருட்சாதனம் பெற்று நற்கருணை உட்கொள்வது என்ற திருச்சபை கட்டளையையும் நினைவுபடுத்துகிறது. மனவருத்தம் மற்றும் மனமாற்றத்தின் காலமானத் தவக்காலத்தில் இத்திருப்பாடலை சிந்திப்பது சாலச்சிறந்தது. இறைவனுக்கு எதிராகவும், நம் அயலாருக்கு எதிராகவும் செய்த பாவங்களைச் சிந்தித்துப்பார்த்து, அறிக்கையிட்டு, மன்னிப்பு பெறவேண்டும் என்பதே இத்திருப்பாடல் நமக்குச் சொல்லும் செய்தி.
இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனுக்கு எதிராக முணுமுணுத்ததையும், அவரைச் சோதித்ததையும், பொன்னாலான கன்றுக்குட்டியை வழிபட்டதையும், பாகால் தெய்வத்தை வணங்கியதையும் சுட்டிக்காட்டி, வரலாற்றில் அவர்கள் செய்த பாவங்களைப் பின்வரும் சொற்றொடர்களில் நினைவுபடுத்துகிறார்.
சொற்றொடர்கள்: 19, 25, 28, 36 மற்றும் 38
அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
அவர்கள் தங்களின் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்; ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.
பின்னர் அவர்கள் பாகால் தெய்வத்தைப் பற்றிக் கொண்டார்கள். உயிரற்ற தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றை உண்டார்கள்;
அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின.
அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்.

சிறந்ததொரு ஒப்புரவு அருட்சாதனம் பெற விரும்பினால் நாம் முதலில் நமது மனச்சான்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தவக்காலத்திலே நமது பங்குகளிலே, ஒருநாள் தியானம் நடத்தப்படுகிறது. அன்றைய நாள் முழுவதும் இறைவார்த்தையோடு நமது வாழ்க்கையை உரசிப்பார்த்து, நமது மனச்சான்றை ஆய்வுக்குட்படுத்தி, அந்நாளின் இறுதியிலே நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனம் பெற்று ஆண்டவரின் உயிர்ப்பை கொண்டாடுவதற்கு நம்மைத் தயாரிக்கிறோம். நாம் இன்று சிந்திக்கும் இத்திருப்பாடலில் இஸ்ரயேல் மக்களின் மனச்சான்றை ஆசிரியர் ஆய்வு செய்திருக்கிறார் என்பது வெள்ளிடமலை.
அடுத்ததாக, நாம் செய்த குற்றத்தை உணரவேண்டும். “நீ செய்தது என்னை இவ்வாறு பாதிக்கிறது” என பிறர் குற்றம் சுமத்தி, அதன்பிறகு அதை உணர்வதைக்காட்டிலும், நமது இந்த செயல் பிறரை இவ்வாறு பாதிக்கிறது என்பதை நாமாக உணரவேண்டும். ஒருவருடைய பார்வையில் குற்றமாகத் தெரிவது மற்றொருவர் பார்வையில் குற்றமாகத் தெரிவதில்லை. இதற்கு காரணம் சுயநலம். எந்த ஒரு செயலையும் பிறருடைய பார்வையிலும் பார்க்கவேண்டிய நாம், நம்முடைய பார்வையில் மட்டும் பார்க்கும் போது, நாம் செய்வது தவறு என நம்மால் உணரமுடிவதில்லை. இறையன்பு மற்றும் பிறரன்பு என்ற அளவுகோல்கள் நாம் செய்த தவறுகளை உணரச்செய்கின்றன.
நாம் செய்த தவறை உணரும் போது அது வருத்தத்தை உருவாக்குகிறது. நமது செயல்களுக்காக வருத்தப்படுவது அவசியம். ஏனெனில் மனவருத்தமே மனமாற்றத்தின் முதற்படி. இதைத்தான் தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலே இவ்வாறு சொல்கிறார்:7:9
இப்போது எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் மனவருத்தம் அடைந்தீர்கள் என்பதற்காக அல்ல, மாறாக உங்கள் மனவருத்தம் மனம்மாறச் செய்தது என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய முறையில் அந்த மனவருத்தத்தைத் தாங்கிக் கொண்டீர்கள்.

ஒப்புரவு அருட்சாதனத்தின்போது, சிலர் தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த, ஏற்கெனவே அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பு பெற்றிருப்பினும் அதே பாவங்களை வருத்தத்தோடு சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் “ஏற்கெனவே அறிக்கையிட்ட பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டன. எனவே நீங்கள் சொல்லத்தேவையில்லை” எனச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இத்திருப்பாடல் என் கண்களைத் திறந்திருக்கின்றது. மீண்டும் மீண்டும் அந்தப் பாவங்களை அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அதற்காக அவர்கள் அதிகம் வருந்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இத்திருப்பாடலின் ஆசிரியர் இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களை மட்டும் அறிக்கையிடவில்லை. மாறாக இறைவன் அவர்களுக்குச் செய்த நன்மைகளையும் எத்தனைமுறை, எப்படியெல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்றும் விளக்கமாகக் கூறுகிறார்.

சொற்றொடர்: 9, 10, 11 மற்றும் 13
அவர் செங்கடலை அதட்டினார்; அது உலர்ந்து போயிற்று; பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல் அவர்களை ஆழ்கடல் வழியே நடத்திச்சென்றார்.
எதிரியின் கையினின்று அவர்களை விடுவித்தார்; பகைவரின் பிடியினின்று அவர்களை மீட்டார்.
அவர்களுடைய எதிரிகளைக் கடல்நீர் மூழ்கடித்தது; அவர்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை.
ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்; அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.

வெறுமனே பாவத்தை அறிக்கையிடுவதற்கும், இறைவன் இவ்வளவு நன்மைகள் செய்தார், எனினும் அவருக்கு எதிராக இவ்வாறு பாவம் செய்தார்கள் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக வேலைக்குச் செல்லாத, பிள்ளைப்பராமரிப்பில் அக்கறைச் செலுத்தாத பெற்றோர்களின் முதியபருவத்தில் பிள்ளைகள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லையென்றால் அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் பிள்ளைகளை ஒழுங்காக பார்த்திருந்தால்தானே, அவர்களைப் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள் என்று எளிதாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்த பெற்றோர்களை, பிள்ளைகள் கண்டுகொள்ளவில்லையெனில் அதை மாபெரும் தவறாகத்தானே பார்க்கிறோம். அதேப் போலத்தான் இறைவன் அத்தனை முறை மன்னித்தும், அவ்வளவு நன்மைகள் செய்தும், இது போன்ற தவறுகளை இஸ்ரயேல் மக்கள் செய்தார்கள் என்று சொல்லும்போது, அவர்களது செயல்களின் கனமும் கூடுகிறது, அதை நினைக்கும் போது அவர்களின் வருத்தமும் கூடுகிறது. இதன் விளைவு, இந்தத் தவறை மீண்டும் செய்யவே கூடாது என்ற வைராக்கியத்தை ஏற்படுத்த உதவுகிறது. இதைத்தான் இனி இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என உறுதியான முடிவு எடுப்பது என்று சொல்கிறோம்.
நாம் செய்த தவறுகளை உணர்ந்தால் மட்டும் போதாது, அவற்றை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும்; பிறர் முன்னிலையில் அறிக்கையிட வேண்டும். இதற்கு மனத்துணிச்சல் வேண்டும். தவறு செய்வது மனித இயல்பு. தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. எனவே நாம் செய்த தவறை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். இதைத்தான் பின்வரும் சொற்றொடர் நமக்குச் சொல்கின்றது. சொற்றொடர் 6
எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.

நமது தவறை ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவது பலவழிகளில் நமக்கு உதவுகிறது. தவறை மறைத்துவிட்டு, அது ‘பிறருக்குத் தெரிந்து விடுமோ’ என்ற உள்ளார்ந்த பயத்தை முற்றிலும் நீக்குகிறது. தவறை ஏற்றுக்கொள்ளும் போது அது நமது மனபாரத்தைக் குறைக்கிறது. நாம் செய்த தவறுகளை நாமே முன்வந்து ஏற்றுக்கொள்ளும்போது, உடனடியாக அது எதிர்மறையான மனநிலையை உருவாக்கினாலும், பிறகு நம்மீது பிறருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனவே நமது குற்றங்களை ஏற்றுக்கொள்ள முன் வருவதுதான் நல்லது.
அடுத்ததாக, தவறு செய்தவர்கள் அதன் விளைவுகளையும் மனம் நோகாமல் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தேர்வுக்கு முன் நன்றாகப் படிக்காத மாணவன், தேர்வில் தோல்வியை அல்லது குறைந்த மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ள முன் வரவேண்டும். அந்த விளைவிலிருந்து தப்பிக்க முயல்வது நல்லதல்ல. அதேபோல தவறு செய்து விட்டு, அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பதும் மாண்பல்ல. மாறாக, நமது குற்றத்திற்கான விளைவை ஏற்றுக்கொள்ளவும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, அத்தவறை மீண்டும் செய்யாதிருக்கத் திட்டமிட வேண்டும். உண்மையான மனவருத்தம், மீண்டும் அதே தவறுகளை செய்யாதிருக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை நமக்குள் ஏற்படுத்தும் என்று சற்றுமுன் குறிப்பிட்டேன். அதோடு கூட, நல்ல மனநிலை உடையவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வர். அத்தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்வர். இறுதியாக நாம் செய்த பாவத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்ய வேண்டும்.
அன்பார்ந்தவர்களே, திருப்பாடல் ஆசிரியரைப் போல நம் மனச்சான்றை ஆய்வு செய்வோம். நம் பாவங்களை அறிக்கையிடுவோம். இரக்கத்தின் காலமான தவக்காலத்திலே மன்னிப்பைப் பெறுவோம். இதுவே இத்திருப்பாடல் நமக்குச் சொல்லும் செய்தி.








All the contents on this site are copyrighted ©.