2012-03-06 15:22:59

திருப்பீட உயர் அதிகாரி - உலகின் இளையோர் அனைவருமே உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய கருவிகள்


மார்ச்,06,2012. இளையோர் மனமாற்றம் அடைந்து இறைவனிடம் வருவது பாரம்பரியம் மிக்க கிறிஸ்துவ நாடுகளில் மீண்டும் நற்செய்தியை எடுத்துரைக்கும் ஒரு முக்கிய வழியாக அமையும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2013ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற உள்ள உலக இளையோர் நாள் முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட, பொது நிலையினர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko, அங்கு சென்று திரும்பியபின் CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் முயற்சியால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட உலக இளையோர் நாள், நற்செய்தி பரப்புப் பணியில் மிகச்சிறந்த ஒரு சக்தியாகச் செயல்படுகிறது என்று கூறிய கர்தினால் Rylko, பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள இளையோர் நாளும் இதே பணியைத் தொடரும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
1987ம் ஆண்டு Buenos Aires நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளைக் குறித்துப் பேசிய கர்தினால் Rylko, 25 ஆண்டுகளுக்குப் பின் இலத்தீன் அமெரிக்காவில் மீண்டும் இந்த நாள் கொண்டாடப்பட உள்ளது பெரும் மகிழ்வைத் தருகிறது என்று கூறினார்.
வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வாழும் இளையோரைப் பற்றிய கேள்வி ஒன்று எழுந்தபோது, இவ்விளையோரின் ஒட்டுமொத்த நிலை குறித்து குறுகிய நேரத்தில் விளக்கம் தருவது சாத்தியமல்ல என்று கூறிய கர்தினால் Rylko, இவ்விரு கண்டங்களின் இளையோர் மட்டுமல்ல, உலகின் இளையோர் அனைவருமே உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய கருவிகள் என்பதை வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.