2012-03-06 15:25:02

காங்கோ நாட்டில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்குக் கத்தோலிக்கத் திருஅவை அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது


மார்ச்,06,2012. காங்கோ நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களில் புனித Louis des Francais கத்தோலிக்கக் கோவில் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது என்றும், இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருடன் தான் தங்கியிருப்பதாகவும் Brazzaville உயர்மறைமாவட்டப் பேராயர் Anatole Milandou கூறினார்.
காங்கோ நாட்டின் தலைநகரில் இஞ்ஞாயிறு நிகழ்ந்த குண்டு தாக்குதல்களில் ஞாயிறு திருப்பலிகள் முடிந்து சென்ற மக்கள் பலர் இறந்துள்ளனர், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஞாயிறு காலை 8 மணி முதல் 11 மணி வரை மூன்று இடங்களில் நடந்த பலமான தாக்குதல்களிலும், பின்னர் ஓரிரு இடங்களில் நடைபெற்ற குறைந்த அளவிலான தாக்குதல்களிலும் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், 2000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. காயமடைந்துல்லோரில் பலர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இறப்போரின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தொடர் தாக்குதல்களுக்கான காரணங்கள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை என்றும், இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்குக் கத்தோலிக்கத் திருஅவை அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.