2012-03-05 15:04:59

வாரம் ஓர் அலசல் – பெண்ணினமே, சாதனை படைக்க வாரீர் International Women's Day


மார்ச்.05,2012. புதுடெல்லியில் இரண்டு வயது பச்சிளம் பெண் குழந்தை, மனிதர் கடித்துக் குதறிய காயங்களுடன், நினைவற்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பழைய செய்தி. கடந்த சனவரி 18ம் தேதி, 16 வயது சிறுமி ஒருவர், இந்த இரண்டு வயதுப் பெண் குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வந்தார். அப்போது அக்குழந்தையின் தலையில் கன்றிப் போன இரத்தக்காயங்களும், உடலில் பற்களால் கடித்து குதறியதற்கான காயங்களும், கை கால்கள் முறிந்தும் இருந்தன. மேலும், அக்குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அக்குழந்தையின்பெற்றோர், ஊர் பெயர் போன்ற விவரங்கள் தெரியாததால், ‘ஃபாலாக்’ (Falak) அதாவது வானம் எனவும் அக்குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார்கள். பாலாக், உயிர் பிழைக்கும் பட்சத்தில், அதனைத் தத்தெடுக்க டெல்லி மகளிர் சங்கம் முடிவு செய்துள்ளது. இத்தகவல்களோடு, கடந்த பிப்ரவரி 20ம் தேதி வேறொரு செய்தியும் ஊடகங்களில் வெளியானது. பாலாக் குழந்தையின் இந்நிலைமையையொட்டி கருத்து தெரிவித்த, மக்கள்தொகை ஆய்வு நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்காவுக்கான அலுவலக இயக்குனர் Carlos Polo, இத்தகைய கொடூரச் செயல்கள், சமுதாயத்தில் பாலியல் அடிப்படையில் நடத்தப்படும் கருக்கலைப்புக்களின் எதிரொலியை வெளிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

ஆண்மகவின் பிறப்பைப் போற்றியும், பெண்மகவின் பிறப்பைத் தாழ்த்தியும் பேசும் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கின்ற இந்தியாவிலும் பிற நாடுகளிலும் கருவிலே பெண்சிசுக்கள் கலைக்கப்படுவது பல ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்து வருகின்றது. குழந்தை ‘ஃபாலாக்’குக்குச் செய்யப்பட்டது போலத்தான், பெண் குழந்தையைக் கர்ப்பத்தில் தாங்கியிருக்கும் தாய்க்கும் செய்யப்படுகின்றது. ஒரு பெண், பெண் குழந்தையைக் கர்ப்பத்தில் தாங்கி வருகிறார் என்றால், அவரது கணவரும் உறவினரும் அப்பெண்ணைத் தள்ளுவது, வயிற்றில் உதைப்பது, உணவும் தண்ணீரும் ஓய்வும் கொடுக்க மறுப்பது என, இவையனைத்துமே அப்பெண் கருக்கலைப்புச் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்துவதாகும். இத்தகைய பழக்கங்கள் இன்னும் இருந்து வருகின்றன என்று போலோ கூறினார்.

அதேசமயம், இவ்வாறு கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் எத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை டாக்டர் சுனிதா பூரி போன்ற பல மருத்துவர்கள் சொல்கிறார்கள். சான் பிரான்சிஸ்கோவில் பணியாற்றும் இந்திய மருத்துவரான பூரி, 65 குடியேற்றதாரப் பெண்களிடம் எடுத்த பேட்டியை வைத்து இவ்வாறு கூறியிருக்கிறார். பெண் சிசுக்கொலை, போர்ப் பகுதிகளில் படைவீரர்களின் பாலியல் இன்பத்துக்கு பெண்கள் பயன்படுத்தப்படுவது,... இப்படியான பாகுபாடுகளும் வன்செயல்களும் இன்னும் பல இடங்களில் தொடர்ந்து இடம் பெற்றுத்தான் வருகின்றன. “போர் தொடர்புடைய பாலியல் வன்முறை” என்ற தலைப்பில், கடந்த மாதத்தில் அறிக்கை வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Margot Wallström, போர் தொடர்புடைய பாலியல் வன்முறை, ஒரு நாட்டிலோ அல்லது ஒரு கண்டத்திலோ மட்டும் இடம் பெறுவதில்லை, இது உலக அளவில் இடம் பெறும் ஆபத்தான செயல் என்று குறை கூறியுள்ளார். ஒரு நாட்டில் போர் முடிந்த பின்னரும், அந்நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதியைக் கட்டி எழுப்புவதற்கும் பாலியல் வன்முறை எவ்வளவு தூரம் அச்சுறுத்தலாகவும் தடையாகவும் இருக்கின்றது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆயினும், பெண்களின் பொருளாதாரத்தையும், அவர்கள் அரசியலில் பங்கெடுப்பதையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இந்த 2012ம் ஆண்டில் ஐ.நா.பெண்கள் அமைப்பு தீவிரமாய் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த அமைப்பின் இயக்குனர் Michelle Bachelet சொல்கிறார்.....
ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் மோதல்களின் போது இடைநிலை வகித்து அமைதிக்கானப் பாதை சமைப்பதற்குப் பெண்களுக்குப் பயிற்சி அளிப்பது, மொரோக்கோ நாட்டுப் பெண்கள் தங்களுக்குரிய சொத்துக்களைப் பெற உதவுவது, ஜாம்பியாவில் பள்ளிச் சிறுமிகளுக்குப் பாதுகாப்புக்களை அமைத்துக் கொடுப்பது... இப்படி பல நாடுகளில் இவ்வாண்டில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கீடு 23 கோடியே 50 இலட்சம் டாலராகும். இது 2010ம் ஆண்டைவிட 33 விழுக்காடு அதிகம். இதனை இவ்வாண்டில் 70 கோடியாக உயர்த்தவும் ஐ.நா. பெண்கள் அமைப்பு முயற்சித்து வருகிறது என்றும் Bachelet கூறினார்.

பெண்களுமே முன்பு போல் இருந்த காலம் இன்று இல்லை. அவர்கள் மிகுந்த விழிப்புடன், அரசியல், அறிவியல், விண்வெளி ஆய்வு, ஆன்மீகம் என எல்லாத் துறைகளிலும் இறங்கிச் சாதனை படைத்து வருகிறார்கள். பெண் குழந்தைகளை அன்புடன் வரவேற்கும் பண்பு தற்போது பல இந்தியக் குடும்பங்களில் அதிகரித்து வருவதையும் நம்மால் மறுக்க முடியாது. பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளிலும், சில ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பழக்கத்தில் இருந்து வரும் சிறுமிகளின் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியை அல்லது வெளிப்புறத்தின் ஒரு பகுதியை வெட்டிவிடும் நடவடிக்கையும் தற்போது குறைந்து வருவதாக, கடந்த மாதத்தில் (பிப்.6,2012) ஐ.நா. மக்கள்தொகை நிதி நிறுவனமும், யூனிசெப் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. இத்தகைய பழக்கங்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள். அத்துடன் இப்பழக்கத்தினால் நலவாழ்வுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. கடும் வலியையும் ஏற்படுத்தி, நீண்ட காலத்திற்கு நலவாழ்வுக்குப் பிரச்சனையாகவும் இருக்கின்றது என்று சமூகக் குழுக்கள், சமயத் தலைவர்கள் உட்பட பலர் பல ஆண்டுகளாக எடுத்த முயற்சியினால் தற்போது இப்பழக்கம் குறைந்து வருகின்றது. ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் சமூகங்கள், இந்நடவடிக்கையைக் கைவிட்டன. இதனைக் கைவிடும் சமூகங்களின் எண்ணிக்கை அண்மை சில ஆண்டுகளில் 8,000த்துக்கு அதிகமாகியுள்ளது. 13 கோடி முதல் 14 கோடி வரையிலான சிறுமிகளும் பெண்களும் இதுவரை இச்செயலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் தவறாமல் பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. “கிராமப் பெண்களின் வாழ்வை மேம்படுத்துதல் – பசியையும் வறுமையையும் அகற்றுதல்” என்ற தலைப்பில் வருகிற வியாழனன்று இந்த 2012ம் ஆண்டின் இவ்வுலக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி சாதனைப் பெண்கள் பற்றி அறிவது மற்ற பெண்களும் சாதனை படைக்கத் தூண்டுதலாக இருக்கும்.
உலகப் பெண்கள் தினக் கொண்டாட்டங்களுக்கு மகளிர் அமைப்புக்கள் ஆர்வத்துடன் தயாரித்து வரும் இந்நாட்களில், டில்லியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி, கல்லூரி மாணவி, மனநிலை பாதிக்கப்பட்ட பெண், இராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 5 பேர், 3 நாட்களில் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த பிப்ரவரி 28ம் தேதி செய்திகள் வெளியாகின. இந்தியாவில் பெண்களுக்கு இன்னும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையை இது போன்ற நிகழ்வுகள் காட்டினாலும், இதே நாட்டில் சுனிதா இராவத் என்ற சக்கர நாற்காலி சாதனைப் பெண் போன்று பல பெண்கள் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். சுனிதா இராவத் பற்றிக் கேட்போம்.

''சுய அனுதாபம், உலகத்திலேயே கொடிய நோய். அதை அணுகடவிடாமல் தற்காத்துக் கொண்டதால்தான், இன்று என் மற்ற நோய்களை எல்லாம் மீறி நான் வாழ்வில் வென்றிருக்கிறேன்!'' என்று கணீரெனச் சொல்கிறார் சுனிதா இராவத். சுனிதா, 'ருமாட்டாய்ட்’ எனும் நோயின் தாக்குதலுக்கு ஆளாகி பத்து அறுவை சிகிச்சைகளையும், பத்து அவசரகாலச் சிகிச்சைகளையும் சந்தித்தவர். ஆனாலும், நோயை எதிர்த்துப் போராடி, சக்கர நாற்காலியில் சுழன்றவாறே, ஃபேஷன் டிசைனராக தன்னை முன்னிறுத்த உழைத்த உழைப்பு, இன்று சுனிதாவை அந்தத் துறையில் வெற்றி பெற வைத்திருக்கிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த சுனிதா, இப்போது மதுரையின் டாப் ரேங்க் ஃபேஷன் டிசைனர் ஆகியிருக்கிறார். ராவத் சொல்கிறார் ----

மேல்நிலைப் பள்ளியை முடித்தவுடன் திருமணம் நடந்தது. புதிய உக்திகளுடன் வெற்றி பெற வேண்டும் என்கிற உத்வேகத்தில் இருந்தபோது, திடீரென ஒரு நாள் என் கால்கள் இரண்டும் இழுத்துக் கொண்டன. மருத்துவப் பரிசோத னையில் 'ருமாட்டாய்ட்’ என்ற நோய் தாக்கியது தெரிந்தது. சிகிச்சை பலனின்றி, நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன். அறுவை சிகிச்சை, இடைக்கால நிவர்த்தி தந்தது. ஆனால்... கைகள், மணிக்கட்டு, கல்லீரல், கணையம், முதுகுத்தண்டு என உடலின் அனைத்துப் பகுதிகளும் வரிசையாக செயல் இழக்கத் தொடங்கின. வாழ்க்கை மீதான நம்பிக்கை தகர்ந்தது. இடையில், என் மகள் பிறந்தாள். வாழ வேண்டும் என்கிற ஆசை மீண்டும் என்னைப் பிடித்துக் கொண்டது. கணவருக்குப் பெண் குழந்தை பிடிக்கவில்லை. ஏற்கெனவே, என் உடல் பிரச்னைகளால் வெறுப்பில் இருந்தவர், என்னையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்து, வேறு திருமணம் செய்துகொண்டார். பெற்றோரின் அரவணைப்பில் இருந்த எனக்கு, எதிர்கால நாட்கள் குறித்த கேள்விகள் அதிகம் முளைத்தன. ஏதாவது பிடிமானம் தேடி, ஃபேஷன் துறை வேலையில் இறங்கிய என்னை, 'ஒரு பெண் உன்னால் என்ன செய்துவிட முடியும்..?’ என்று வீட்டில் உள்ளவர்களே தளர்த்தினார்கள். அதிலிருந்து தப்பிக்க... மதுரையில் உள்ள உறவுக்காரப் பெண் வீட்டுக்கு வந்தேன்'' என்றவருக்கு அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது வாழ்க்கைக்கான வெளிச்சம். 'உன்னால் முடியும்’ என்கிற மந்திரம் மட்டும் என்னுள் ஒலித்துக்கொண்டே இருக்க... உடல் உறுப்பு போல் நோயையும் இயல்பாகச் சுமந்தேன். அந்தப் பக்குவம்தான், தொழிலில் அதிகம் கவனம் குவிக்க வைத்து, 250-க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்களைச் சேர்த்திருக்கிறது... வருமானத்தையும் நிறைவாக்கியிருக்கிறது!'. இன்று என் பெண்ணுக்கு நல்ல கல்வியும், சூழலும் கொடுத்திருக்கிறேன். 'நமக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்கிறது..?’ என்ற புலம்பலை விரட்டிவிட்டு நம்பிக்கையோடு நீந்தினால், வெற்றி நமக்கே!''

இராவத் போன்ற எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் தொழிலும், விளையாட்டிலும் படிப்பிலும் சாதனை அரசிகளாகத் திகழ்கிறார்கள். உலகப் பெண்கள் தினத்தில் இத்தகைய பெண்களுக்கு நமது சிறப்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். பாரதி காட்டிய புதுமைப் பெண்ணே, உன்னால் முடியும், உன்மீது உனக்கு நம்பிக்கை மட்டும் இருந்தால்!. பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகளில் தங்கங்களை வென்றிருக்கும் 21 வயதான சாய்னா நெவால் (Saina Nehwal) சொல்லியிருப்பது போல, கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி!








All the contents on this site are copyrighted ©.