2012-03-05 15:14:29

திருத்தந்தையின் மூவேளை செப உரை


மார்ச்,05,2012. இத்தவக்காலத்தில், கடந்தவாரம் இயேசுவோடு பாலைநிலத்தில் நடந்து சோதனைகளை வெற்றிக்கொள்ள அழைக்கப்பட்ட நாம், இவ்வாரத்தில் அவரோடு இணைந்து மலையிலேறி செபிக்க அழைக்கப்படுகிறோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது விண்ணப்பித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு வாசகம் கூறும் இயேசு உருமாறிய நிகழ்வு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவோடு இணைந்து செபத்தின் மலை நோக்கி ஏறிச்சென்று அவரின் மனித முகத்தில் இறைமகிமையைக் கண்டு தியானிப்போம் என்றார்.
இயேசு தன் சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச் சென்று அவர்கள் முன் உரு மாறியபோது அவருடைய ஆடைகள் வெள்ளை வெளீரென ஒளி வீசியதையும், எலியாவும் மோசேயும் தோன்றி அவரோடு உரையாடியதையும், அப்போது மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட, அம்மேகத்திலிருந்து, 'என் அன்பார்ந்த மகன் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்’ என்ற குரல் ஒலித்ததையும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தத் திருத்தந்தை, இக்குரல் இயேசுவுக்கான சாட்சியம் மட்டுமல்ல, இக்குரலுக்கு செவிமடுப்போர்களுக்கு வழங்கப்படும் கட்டளை என்றார்.
மலையிலிருந்து இறங்கி வரும்போது இயேசு தன் சீடர்களுடன், தான் படவேண்டிய துன்பங்கள் குறித்து உரையாடியதையும், விசுவாசிகளுக்கு நினைவுறுத்திய பாப்பிறை, அவரின் பாடுகள் மற்றும் மரணம் குறித்து எழுந்திருக்கும் சீடர்களின் மன இருளை, அவர்கள் முதலில் கண்ட ஒளி பிரகாசித்து அகற்ற வேண்டும் என இயேசு ஆவல் கொண்டார் என மேலும் எடுத்துரைத்தார்.
நாமும் நம் வாழ்வின் துன்பச் சூழல்களை வெற்றிகொள்ள உள்மன ஒளி தேவைப்படுகிறது என மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.