2012-03-05 15:21:03

ஈரான் கிறிஸ்தவப் போதகரின் விடுதலைக்கு குரல் எழுப்பும் ஜெர்மானியர்கள்


மார்ச்,05,2012. ஈரானில் மரணதண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அந்நாட்டு கிறிஸ்தவ போதகர் யூசூப் நாதர்கனியை தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டுமென ஜெர்மன் நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் முஸ்லீமாக பிறந்து, தனது 19வது வயதில் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய நாதர்கனி, ஈரான் கிறிஸ்தவ சபை என்ற பெயரில் ஒரு திருச்சபையை நிறுவி, கிறிஸ்தவச் சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே, கடவுளை நிந்தித்த குற்றத்திற்காக, கடந்த 2009ம் ஆண்டு அக்டோபரில் அவரைக் கைது செய்த ஈரான் அரசு, நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடையக் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இது குறித்து பேட்டி அளித்த ஜெர்மனியின் வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர், கிறிஸ்தவப் போதகரைத் தூக்கிலிடும் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று ஈரான் நாட்டுத் தூதுவருக்கு, ஜெர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்ட்டெர்வெல் (Guido Westerwelle) அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி கிறிஸ்தவப் போதனைகளில் ஈடுபட்ட யூசூப் நாதர்கனி மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டிருப்பதால் எந்த நேரமும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், போலந்து போன்ற நாடுகளும் போதகரின் விடுதலைக்குக் குரல் எழுப்பி வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.