2012-03-05 15:21:41

ஆயர் Stephen Tiru அவர்களின் அடக்கத் திருப்பலியில் 10000க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்டனர்


மார்ச்,05,2012. மார்ச் 3ம் தேதி, இச்சனிக்கிழமையன்று இறையடி சேர்ந்த ஆயர் Stephen Tiru, தன் இறுதிநாட்களில் அதிகத் துன்பங்களைத் தாங்கி வந்தாலும், அத்துன்பங்களை வெளிக்காட்டாமல், மக்களிடம் மிகுந்த அன்புடன் பழகினார் என்று கர்தினால் Telesphore Toppo கூறினார்.
இச்சனிக்கிழமை தன் 74வது வயதில் இறையடி சேர்ந்த Khunti மறைமாவட்ட ஆயர் Stephen Tiru அவர்களின் அடக்கத் திருப்பலியைத் தலைமையேற்று நடத்திய கர்தினால் Toppo, தானும் ஆயர் Tiruம் குருத்துவப் பயிற்சியில் ஒரே ஆண்டு இணைந்ததை தன் மறையுரையில் நினைவு கூர்ந்து பேசினார்.
10000க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்ட இந்த அடக்கத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சார்பில் அனுப்பப்பட்ட அனுதாபத் தந்திச் செய்தி வாசிக்கப்பட்டது.
1937ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி பிறந்த Stephen Tiru, 1969ம் ஆண்டு குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1986ம் ஆண்டு இவர் தும்கா மறைமாவட்டத்தின் ஆயராகவும், பின்னர் 1995ம் ஆண்டு Khunti மறைமாவட்டத்தின் ஆயராகவும் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
ஆயர் Tiru அவர்களின் அடக்கத் திருப்பலியில் அவரது முந்தைய மறைமாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
ஆயர் Tiru தும்கா மறைமாவட்டத்தை விட்டு பணிமாற்றம் பெற்று 17 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அந்த மறைமாவட்டத்தின் மக்கள் அவரது அடக்கத் திருப்பலியில் கலந்து கொண்டது, ஆயர் மீது மக்கள் கொண்டிருந்த அன்புக்கு தகுந்த சான்று என்று தும்கா மறைமாவட்டத்தின் இந்நாள் ஆயர் Julius Marandi கூறினார்.








All the contents on this site are copyrighted ©.