2012-03-03 13:00:39

கராச்சி பேராயர் - Shahbaz Bhatti யின் தியாகம் வீண் போகாது


மார்ச்03,2012. பாகிஸ்தானில் ஓராண்டுக்கு முன்னர் கொல்லப்பட்ட Shahbaz Bhatti யின் தியாகம், அந்நாட்டின் சிறுபான்மை மதத்தவர், மற்றவர்களைப் போலவே உரிமைகளையும் மாண்பையும் முழுமையாய் அனுபவிக்க வேண்டுமென்ற ஆவலின் வெளிப்பாடாக இருக்கின்றது என்று கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் கூறினார்.
பாகிஸ்தானில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய கத்தோலிக்கரான Shahbaz Bhatti, 2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி காலையில் தனது பணிக்குச் சென்று கொண்டிருந்த சமயம் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். 42 வயதான இவரது உடலை 30 குண்டுகள் துளைத்திருந்தன. பாகிஸ்தானின் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராகப் பணியாற்றிய Shahbaz Bhatti, அந்நாட்டின் தேவநிந்தனை சட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்.
Shahbaz Bhatti கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவுத் திருப்பலியை இவ்வெள்ளிக்கிழமை நிறைவேற்றிய பேராயர் கூட்ஸ், சிறுபான்மையினர் சமத்துவத்தை விரும்புகின்ற ஒரு நாட்டிற்கு Shahbaz Bhatti சாட்சியாக இருக்கிறார் என்று கூறினார்.
Shahbaz Bhatti இறக்கவில்லை, ஆனால் அவர் கிறிஸ்துவில் வாழ்கிறார் எனவும், இவரது தியாகம் வீணாய்ப் போகாது எனவும் உரைத்தார் பேராயர்.
மேலும், Shahbaz Bhatti மறைசாட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென்று இந்த ஓராண்டு நினைவு நாளில் பல இடங்களில் பல குரல்கள் வேண்டுகோள்களை முன்வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.