2012-03-01 14:53:14

கவிதைக் கனவுகள் - அலைகள்


காலையில் கடற்கரைப் பக்கம் சென்றேன்
கடலலைகள் கரையைத் தழுவித் திரும்பின
கால்கள் நடையைத் தளர்த்தச் சொல்லின
கால்கள் நின்றன நினைவுகள் பறந்தன
கடலலைகளில் கண்ணீரும் கரைந்து ஓடின
கடந்த காலம் அடுக்கடுக்காய் அலைமோதின

அலைகளே நீங்கள் நில்லாமல் ஓடுவது ஏன்?
அதுதான் எங்கள் இயல்பு!
அலைகளே நீங்கள் நல்லது, நல்லது
அல்லாதது அனைத்தையும் அள்ளிச் செல்வது ஏன்?
அதுவும் எங்கள் இயல்பு!
அலைகளே உங்கள்மீது சவாரி செய்வோரை
அணைத்துக் கொள்வது ஏன்?
அதுவும் எங்கள் இயல்பு!
அலைகளே உயிரை உறிஞ்சிவிட்டு ஊதிப்போன உடலை மட்டும்
அள்ளி வந்து கரையில் தள்ளுகிறீர்களே, ஏன்?
அதுவும் எங்கள் இயல்பு!

அலைகள் அவற்றுக்கு அன்னியமான அனைத்தையும்
அடித்து வந்து உமிழ்ந்து விடும்
அது அலைகளின் பண்பு!.
மனமே, நீயும் உனக்கு அன்னியமான அனைத்தையும்
உதறித் தள்ளிவிடு.
உன் கண்கள் கவலைக் கண்ணீரைச் சுரக்காது
உன்னை உருவாக்கியவரும் சொல்கிறார் :
“முன்பு நடந்தவற்றை மறந்துவிடு(ங்கள்);
முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிரு(ங்கள்);
இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்” (எச.43:18 )







All the contents on this site are copyrighted ©.