2012-02-29 15:36:37

பிப்ரவரி 29, 2012. கவிதைக் கனவுகள்............. தேர்வு செய்யுங்கள்


வாழ்வில் தேர்வுகள் எல்லா நிமிடமும் நிகழ்கின்றன
இதுவா அதுவா என்ற தேர்வுகள்
தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

பள்ளித் தேர்வு, பள்ளியில் தேர்வு,
பாடத் தேர்வு, ஆண்டிறுதித் தேர்வு........என
கல்வியில்தான் எத்தனைத் தேர்வுகள்!
பள்ளிப் படிப்பை முடித்து எந்தப் பாடத்தைத் தேர்வு செய்வது?
கல்லூரி முடித்து எந்த வேலைக்கு முயல்வது?

என்ன வேண்டும் என குழந்தைகள் கேட்கமுடிவதில்லை
என்ன கிடைக்குமோ அதையே வேண்டும் நிலை.
ஓர் ஓவியனை மடியச்செய்து மருத்துவனை உருவாக்க முயல்வதும்,
ஒரு கதாசிரியனை முடக்கி மென்பொருள் வித்தகனை படைக்க
முயல்வதும்...... தேவையா?

ஆண்டிறுதித் தேர்வுக்குப் பள்ளிகளின் தயார் நிலை
மாணவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
நூறு விழுக்காடு வேண்டும் என கல்வி நிறுவனங்கள்,
என் குழந்தை முதலில் வரவேண்டும் என பெற்றோர்.
பலரின் எதிர்பார்ப்புகளுக்கிடையில்
அரைபடுகிறது மாணவ உள்ளம்

நீங்கள் முயன்று கிடைக்காத கனியை
உங்கள் குழந்தை மூலம் பறிக்க முயல வேண்டாம்.
அவன் போக்கில் போக விடுங்கள்
வழியைக் காட்டி வலியைக் குறையுங்கள்
இல்லையெனில் உங்கள் அழுத்தம்
அவன் பிள்ளைகளிலும் தொடரக்கூடும்.








All the contents on this site are copyrighted ©.