2012-02-28 15:26:56

கவிதைக் கனவுகள் பிப்ரவரி 29... இலவச இணைப்பா?


பிப்ரவரி 29
நான்காண்டுகளுக்கு ஒரு முறை
நம்மைத் தேடிவரும் பரிசு

நாம் தேடி அலையும் பரிசு
நம்மைத் தேடி வரும் பரிசு
இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்
இயல்பு வாழ்வுக்குப் பாடங்கள்

ஊன் உறக்கம் துறந்து
ஊரெங்கும் திரிந்து
நாம் தேடும் பரிசு
நமக்கது பெரிது.

நாமாகத் தேடாமல்
தானாக வந்து சேரும்
பரிசுகள் ஏனோ
பெரிதெனத் தெரிவதில்லை.

பிப்ரவரி 29
நம்மைத் தேடி வந்த பரிசு.
கூடுதலாக வந்துள்ள இந்த நாள்...
இலவச இணைப்பா?

இலவச இணைப்பு என்பது
வர்த்தக உலகின் உக்தி
இன்னும் அதிகம் அதிகமாய்
வாங்கத் தூண்டும் சக்தி.

அனைத்திற்கும் விலைபேசும்
ஆணவம் வளர்ந்தாலும்
காலத்தை விலைபேச
ஞாலத்தில் யாருமில்லை.

கூடுதலாக ஒரு நாள்
தேடி வந்தத் திருநாள்
விலையற்ற இந்நாளை
விதையாக்கி வளர்வோம்.








All the contents on this site are copyrighted ©.