2012-02-28 14:57:26

ஒலிம்பிக் பந்தயங்களின்போது இலண்டன் மாநகரில் மனித வர்த்தகம் அதிகமாகும் ஆபத்து பெருகியுள்ளது


பிப்.28,2012. இலண்டன் மாநகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் பந்தயங்களின்போது அந்நகரில் மனித வர்த்தகம் அதிகமாகும் ஆபத்து பெருகியுள்ளது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் ஆலோசகர் ஒருவர் கூறினார்.
இவ்வாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பந்தயங்கள், அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் பந்தயங்களின்போது, இலண்டன் நகரில் மனித வர்த்தகங்கள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதென்று ஆயர் பேரவையின் ஆலோசகர் Cecilia Taylor-Camara கூறினார்.
இந்த ஆபத்தைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, ஆயர் பேரவையின் ஆலோசகர், ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் Jorge Nuño Mayerஐ அண்மையில் சந்தித்துப் பேசினார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையும், இலண்டன் மாநகரக் காவல்துறையும் இணைந்து இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கத்தோலிக்கத் திருஅவை மக்கள்மீது காட்டி வரும் அக்கறையை, ஆயர் பேரவையின் இந்த முயற்சி சுட்டிக்காட்டுகிறது என்று காரித்தாஸ் பொதுச்செயலர் Mayer எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.