2012-02-28 14:58:41

உண்மையைக் கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இலங்கை ஆயர்கள் வேண்டுகோள்


பிப்.28,2012. அரசுத்தலைவரின் 'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின்' பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கை ஆயர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை கூறும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதே சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு சிறந்த பதிலாக அமையும் என ஆயர் பேரவைத்தலைவர் கர்தினால் மால்கம் இரஞ்சித் மற்றும் செயலர் ஆயர் நார்பர்ட் அந்த்ராடி கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
'உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின்' பரிந்துரைகள், வருங்காலத்திற்கான நம்பிக்கைகளைத் தாங்கியவைகளாக உள்ளன என்று கூறும் இலங்கை ஆயர்களின் அறிக்கை, தேசிய ஒப்புரவை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சியில் இப்பரிந்துரைகள் ஒரு நல்ல அடித்தளத்தை வழங்க முடியும் எனவும் நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.
பழைய காயங்களை அகற்றுவதுடன், போரில் பாதிக்கப்பட்டோருடன் ஒப்புரவை உருவாக்குவதன் மூலம் தேசிய ஒன்றிப்பு, அமைதி மற்றும் இணக்க வாழ்வுக்குச் சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும் இலங்கை ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
அமைதியும் ஒப்புரவுமே இன்றைய இலங்கையின் உடனடித் தேவை என்பதை மனதிற்கொண்டு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை கூறும் பரிந்துரைகளைச் செயல்படுத்த அரசு உடனடியாக முன்வர வேண்டும் என ஆயர்கள் அரசை மேலும் விண்ணப்பித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.