2012-02-28 14:57:03

இரண்டாயிரம் தமிழ் குடும்பங்களுக்கு உலர் உணவு உதவி திடீர் நிறுத்தம்


பிப்.28,2012. திரிகோணமலை மாவட்டத்தின் மூதூரில் அகதி முகாம்களில் தங்கியுள்ள சம்பூரைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு உதவி நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே போர் நடந்த பொழுது, சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த இந்த மக்கள் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மூதூர் பகுதியில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமது சொந்த இடங்களில் மாத்திரமே மீள்குடியேறுவோம் என்று மக்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற நிலையில், மக்களுக்கான உலர் உணவு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாற்றிடங்களில் குடியேற சம்மதிக்கவில்லையெனில் உலர் உணவு நிறுத்தப்படும் என்று இந்த மக்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கிணங்க தற்பொழுது உலக உணவுத் திட்டத்தை அரசு நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், வேறு இடங்களில் குடியேறுவதற்கு மக்கள் தொடர்ந்து சம்மதிக்க மறுத்தால், மூதூர் அகதி முகாங்களில் இயங்கும் தற்காலிகப் பள்ளிகளும் அடுத்து மூடப்படுமென அரசு தரப்பு எச்சரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.