2012-02-27 14:58:11

வாழ்வைப் பாதுக்காக்க அழைப்பு விடுக்கும் ஹொன்டுராஸ் ஆயர்களின் அறிக்கை


பிப்.27,2012. இறைவனிடமிருந்து வரும் கொடையாக வாழ்வை ஏற்றுக்கொள்ளவும், வாழ்வை அச்சுறுத்தும் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளவும் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார் என்கிறது ஹொண்டுராஸ் ஆயர்களின் வாழ்வுக்கு ஆதரவான அண்மை அறிக்கை.
'வாழ்வைப் பாதுகாப்பதற்கு' என்ற தலைப்பில் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, மனித வாழ்வும் மாண்பும் எவராலும் மீறமுடியாத அடிப்படை உரிமை என்கிறது.
அண்மையில் ஹொண்டுராஸ் சிறையில் இடம்பெற்ற பெருவிபத்தில் எறத்தாழ 360 பேர் இறந்தது குறித்து தங்கள் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், இது குறித்த முழுவிசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும், சிறையில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய சுகாதாரமின்மை, உணவின்மை ஆகியவைகளையும் தாண்டி, வன்முறை, கொலை, இலஞ்ச ஊழல், சித்ரவதை, மனஅழுத்தம், போதைப்பொருள் அடிமைத்தனம், ஒழுக்கமின்மை, சட்டத்திற்கு புறம்பானவை ஆகிய பிரச்னைகளும் நோக்கப்படவேண்டும் எனவும் ஆயர்களின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
இன்றைய ஹொண்டுராஸ் சமூகத்தின் உண்மை நிலைகளை எதிர்நோக்கும் தலத்திருஅவை, வாழ்விற்கான மதிப்பு மற்றும் அமைதிக் கலாச்சாரத்திற்காக உழைப்பதற்கு ஏற்ற பரிந்துரைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளதையும் ஆயர்களின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.







All the contents on this site are copyrighted ©.