2012-02-27 14:21:35

வாரம் ஓர் அலசல் – வருங்காலச் செல்வங்களே...


பிப்.27,2012. RealAudioMP3 Honorine Noudjemedji என்ற பெனின் நாட்டுச் சிறுமி, அந்நாட்டின் Porto Novo சந்தையில், கோபுரம் போலத் தட்டுகளில் ரொட்டிகளை அடுக்கித் தலையில் வைத்துக் கொண்டு தினமும் கூவிக் கூவி விற்று வந்தாள். அவள் தினமும் விற்ற இரண்டு தட்டுகள் ரொட்டிக்கு, 1 டாலர் 20 சென்ட் பெறுமான கூலிதான் கிடைத்தது. இந்தக் கூலிப் பணமானது அச்சிறுமி விற்ற மொத்த விற்பனையில் பத்து விழுக்காடாகும். இப்படி வேலை செய்து கொண்டே, அந்நகரில் சலேசிய சபை அருள்சகோதரிகள் நடத்தும் சிறார்நல மையம் சென்று எழுத வாசிக்கவும் கற்றுக் கொண்டாள். அதனால் ஒருநாளைக்கு இரண்டு தட்டுகள் ரொட்டியை விற்பதற்குப் பதிலாக, ஒரு தட்டு ரொட்டியை மட்டுமே அவளால் விற்க முடிந்தது. இதனால் வீட்டில் பிரச்சனை வெடித்தது. இரண்டு ஆண்டுகள் அம்மையத்திற்குச் சென்று வந்த ஹொனோரின், அங்குச் செல்வதை நிறுத்தி விட்டாள். ஒருநாள் வீட்டில் காசை எடுத்து விட்டாள் என்று சொல்லி, சகோதரர்கள் அடித்து உதைக்க, அந்த அடிஉதைகளைத் தாங்க முடியாமல் அம்மையத்திற்கு ஓடிச் சென்று தஞ்சம் புகுந்தாள். ஆயினும் ரொட்டி விற்பதை மட்டும் விட்டுவிடவில்லை. Claudine Bohissou என்ற அம்மையத்தின் பணியாள், ஹொனேரினிடம் அவளது தாயை அழைத்து வருமாறு பலமுறை சொல்லியும் அச்சிறுமியால் இயலவில்லை. திடீரென ஒருநாள் Jeanette Olegbeye என்ற ஒரு பெண், கடும் கோபத்துடன் அம்மையத்திற்குச் சென்றார். தனது மகள் ஹொனேரினை மீண்டும் ரொட்டி விற்பதற்குச் சந்தைக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார். அச்சமயம், கழுத்தில் அணியும் பாசிமாலையையும் கையில் போடும் பாசி வளையலையும் ஜெனட்டுக்குக் கொடுத்தார் Bohissou. உடனே ஜெனெட் அமைதியாகிவிட்டார். அந்தப் பாசிமாலை, சிறுமி ஹொனோரின் செய்தது. சிறிது நேரச் சிந்தனைக்குப் பின்னர், தாய் ஜெனட் சொன்னார் : “அம்மா, என் மகளின் நடத்தையில் இப்போது நல்ல மாற்றத்தைப் பார்க்கிறேன். பணத்தை மிகவும் கவனமுடன் கையாள்கிறாள். 1,2,3,4,5.. என்று எண்களைச் சொல்லி எழுதுகிறாள். இதெல்லாம் இங்குக் கற்றுக் கொண்டதாகச் சொன்னாள்” என்று. பின்னர் ஹொனோரினுக்கு 12 வயது ஆனபோது அவளுக்குத் திருமணம் செய்து வைக்க அக்குடும்பம் தயாரானதாகச் செய்தியில் வாசித்தோம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அலபாமா மாநிலத்தின் Attalla வில் Savanna Hardin என்ற 9 வயதுச் சிறுமி, மூன்று மணி நேரம் ஓடியதால் இறந்தாள். இச்சிறுமி விருப்பப்பட்டு ஓடவில்லை. ஓடும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டாள். இவள், ஒரு சாக்லேட் இனிப்பைத் தின்றது தொடர்பாக, தனது பாட்டியிடம்(மாற்றாந்தாயின் தாய்) பொய் சொன்னாள் என்பதற்குக் கிடைத்த தண்டனை அது. இத்தண்டனையைக் கொடுத்த அவளது 27 வயது மாற்றாந்தாயும், அந்தப் பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வியாழனன்று பல தினத் தாள்களில் வெளியான செய்தி இது.
அன்பு நேயர்களே, ஹொனோரின், சவான்னா போன்று எண்ணற்ற சிறுவர் சிறுமியர் பல வளரும் நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் வறுமையின் பிடியில் சிக்கித் தங்களது பாலப் பருவச் சுகங்களைத் தொலைத்து நிற்கின்றனர். ஓடி விளையாட வேண்டிய வயதில் ஓலைப்பாய் பின்னுகிறார்கள், ஓடு சுமக்கிறார்கள். பட்டாசு கொளுத்த வேண்டிய வயதில் பட்டாசு தயாரிக்கிறார்கள். பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் பாய்மரங்களில் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். காசு பற்றிய கவலையின்றி வாழ வேண்டியவர்கள் காசுக்காகக் கண்டவரிடமெல்லாம் கையேந்துகின்றார்கள். எழுத வேண்டிய இவர்களது கைகள், எடுபிடி வேலை செய்கின்றன. சத்தாகச் சாப்பிட வேண்டிய இந்தப் பிஞ்சுகள், சாப்பாட்டு மேஜையைத் துடைத்துக் கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் அன்றாடம் பார்க்கும் காட்சி இது.
யூனிசெப் என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறார் நிதி நிறுவனம், “உலகச் சிறாரின் நிலை 2012” என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. உலகில், நகரங்களிலும் நகர்சார்ந்த பகுதிகளிலும் சிறார் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இவ்வறிக்கை கவனம் செலுத்துகிறது. இவ்வறிக்கையின் சில தகவல்களைக் கேட்போம்.
இன்றைய உலகின் 700 கோடிப் பேரில் பாதிக்கு மேற்பட்டோரும், இன்று உலகிலுள்ள சிறாரின் மொத்த எண்ணிக்கையில் நூறு கோடிக்கு மேற்பட்டோரும் நகர்சார்ந்த பகுதிகளில் வாழ்கின்றனர். நகரங்களிலும் நகர்சார்ந்த பகுதிகளிலும் வாழ்கின்ற எல்லாச் சிறாருமே, நகரங்களின் பொருளாதார வளர்ச்சியினால் பயனடைவதில்லை. நகரங்களில் சென்று குடியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றையச் சூழலில், சிறாரின் உரிமைகளில் அக்கறை காட்டப்படுவதில்லை. நலவாழ்வு வசதிகள், சத்துணவு, கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு உரிமை இருந்தும், இவை கிடைக்காமல் இன்னல்களைச் சந்திக்கின்றனர். பள்ளிகள், மருத்துவம், பொழுதுபோக்கு ஆகியவைகளுக்கு நகரங்களில் நல்ல வாய்ப்புகள் இருந்தும், சேரிகளில் வாழும் சிறார், குடியேற்றதாரச் சிறார், தெருக்களில் வாழ்கின்ற அல்லது வேலை செய்கின்ற சிறார், சரியான ஆவணங்களின்றி குடியேறியுள்ள குடும்பங்களின் சிறார் உட்பட சமுதாயத்தில் நலிந்த சிறார், நகரங்களின் இந்த வாய்ப்புக்களை அனுபவிக்க இயலாமல் இருக்கின்றனர். கும்பல் வன்முறையும், தொழில் ஏய்ப்பும் காணப்படும் சேரிகளில் வளரும் சிறார் நிலைமை மிகவும் கொடுமையானது. அடுத்த வாரம் எங்கு செல்வோம், எங்கு வாழ்வோம், என்ன செய்வோம், சுத்தத் தண்ணீர் கிடைக்குமா? என்ற நிச்சயமற்றநிலை இச்சிறாரின் வாழ்வு. இவ்வாறெல்லாம் யூனிசெப் நிறுவன அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சிறார் உரிமைகளுக்காக உழைக்கும் பல பன்னாட்டு ஆர்வலர்கள், யூனிசெப் நிறுவனத்தின் இவ்வறிக்கை குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆப்ரிக்காவின் ஜிம்பாபுவே நாட்டின் சிறாரில் 13 விழுக்காட்டினர், குழந்தைத் தொழிலாளர். 18 வயதுக்கு உட்பட்ட சிறாரைக் கடினமான வேலையில் யாரும் அமர்த்தக் கூடாது. அதை மீறினால் தண்டனை உண்டு என்று அந்நாட்டின் தொழிற்சட்டம் கூறினாலும், குழந்தைத் தொழில்முறை நிறுத்தப்படவில்லை. அந்நாட்டில் 13 இலட்சம் சிறார் பெற்றோர் இல்லாதவர்கள் இவர்களில் சுமார் ஒரு இலட்சம் சிறார், தங்களது வாழ்வுக்குத் தாங்களே வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர் வறட்சி, பொய்த்துப் போன அறுவடை, விலைவாசி ஏற்றம் ஆகியவற்றால் அப்பகுதி நாடுகள் கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்குகின்றன. இந்நாடுகளில் ஒன்றான Chad நாட்டில் பணிசெய்யும் யூனிசெப் பிரதிநிதி Bruno Maes விவரிக்கிறார்.........
சாஹெல் பகுதியில், ஏறக்குறைய பத்து இலட்சம் சிறார், கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மற்றும் தொற்று நோய்களின் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். நைஜர் மற்றும் சாட் நாடுகளில் காலராவும் அம்மையும் பரவி வருகின்றன. இவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவில்லையெனில் நிலைமை மிக மோசமாக மாறும் என்று Maes எச்சரிக்கிறார்.
அன்பு நேயர்களே, உள்நாட்டுக் கலவரங்களும், வறுமையும், பஞ்சமும், பட்டினியும், புலம் பெயர்வும், குடியேற்றமும் இன்று உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. இவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது நமது வருங்காலச் செல்வங்கள்தான். இச்சிறார்தான் வருங்கால உலகின் மூலதனம். இத்தகைய சிறார் உங்கள் வீட்டிலும் இருக்கலாம், பக்கத்து வீட்டிலும் இருக்கலாம், உங்கள் ஊர் முகாமிலும் குடிசையிலும் வாழலாம். இச்சிறார் வாழ்வு மலர நாம் என்ன செய்யப் போகிறோம்?, நமது பங்களிப்பு என்ன?
கர்மவீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த சமயத்தில், ஓர் ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் பகல் 11 மணி இருக்கும். அவர் வீட்டில் பலர் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அந்த நேரம் ஒரு 12 வயதுச் சிறுவனும் 8 வயதுச் சிறுமியும் அவர் வீட்டு வாசலில் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். எண்ணெய் தடவாத தலை, அழுக்கு உடை. அந்த ஏழைச் சிறாரை ஒருவர் வந்து விரட்டிவிட, அவர்களும் பயந்து கொண்டே விலகிப் போனார்கள். ஆனால் மீண்டும் அங்கே வந்தார்கள். அச்சமயம் பார்த்து ஒரு பிரமுகரை வழியனுப்ப வாசல்வரை வந்த காமராசர் அந்தச் சிறாரைப் பார்த்து விட்டார். யாரைப் பார்க்க வந்தீர்கள்? எனக் கேட்டுக் கொண்டே அவர்களிடம் அவர் செல்ல, அச்சிறுமியோ, “என் அண்ணனுக்குப் பரீட்சைக்குக் கட்ட அம்மாவிடம் பணம் இல்லை” என்றாள். “அம்மாதான் இங்கு அனுப்பினார்களா?” என்று காமராசர் வினவ, “இல்லை. நாங்களாகவே வந்தோம். அம்மா தினமும் அப்பளம் போட்டு வீடு வீடாகச் சென்று விற்று வருவார்கள். அதிலேதான் எங்களைப் படிக்க வைக்கிறார்கள்” என்றாள். அதற்குமேலும் கேட்க மனது சகிக்காத காமராசர், தனது உதவியாளரைக் கூப்பிட்டு சத்தியமூர்த்தி பவனுக்குப் போன் போடு, நானே பேசுகிறேன் என்றார். அந்த ஆள் அவசரமாகத் தொலைபேசி எண்களைச் சுழற்றிக் கொண்டு இருந்த போதே, வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, காமராசரே, திடீரென மாடிப்படி ஏறிப்போய் ஒரு கவருடன் வந்தார். அந்தச் சிறாரைக் கூப்பிட்டார். அச்சிறுமியிடம் சில பத்து ரூபாய் தாள்களைக் கொடுத்து, இதை வைத்து அண்ணன் பரீட்சைக்குப் பணம் கட்டி விடு என்றார். பின்னர் அச்சிறாரிடம், அம்மா பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளைகளாக நடங்கள் என்று சொல்லியனுப்பினார்.
இன்று நமது சமுதாயத்தில் பல காமராசர்கள் உருவாகட்டும். வருங்காலச் செல்வங்கள் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைக்கட்டும். வருங்காலச் செல்வங்களும் நாளைகளை வெல்லட்டும்.








All the contents on this site are copyrighted ©.