2012-02-27 14:59:23

திருப்பீடத்திற்கும் வியட்நாமுக்கும் இடையே அதிகாரப்பூர்வமான உறவுகளை நிறுவுவது குறித்த பேச்சு வார்த்தை ஆரம்பம்


பிப்.27,2012. திருப்பீடத்திற்கும் வியட்நாம் நாட்டிற்கும் இடையே அதிகாரப்பூர்வமான உறவுகளை நிறுவுவது குறித்த பேச்சு வார்த்தை இத்திங்களன்று வியட்நாம் நாட்டின் Hanoi நகரில் ஆரம்பமாகியது.
பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீட அவையின் துணைச் செயலர் பேராயர் Ettore Balestrero, திருப்பீடத்தின் சார்பில் அந்நாட்டிற்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை வகிக்கிறார். பன்னாட்டு உறவுகளின் இணை அமைச்சர் Bui Thanh Son, வியட்நாம் அரசுக் குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.
இத்திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருநாட்கள் நடைபெறும் இக்கூட்டம் வெற்றிகரமாக அமைவதற்கு தலத் திருஅவை சிறப்பான செபங்களை எழுப்பி வருகிறதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வியட்நாமில் பெரும்பாலான பகுதிகளில் அரசுக்கும் திருஅவைக்கும் நேரடி மோதல்கள் இல்லையெனினும், மலைப் பகுதிகளிலும் இன்னும் பிற கிராமங்களிலும் பணியாற்றும் இறைபணியாளர்களுக்கு அரசு பல வழிகளில் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறதென்றும், இறைபணியாளர்களுக்கு எதிராக அரசே நேரடியாகச் செயல்படாமல், உள்ளூர் ரௌடிகளின் வழியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பிப்ரவரி 26, தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று வியட்நாமின் பல்வேறு கோவில்களில் மக்கள் கூடிவந்து, அந்நாட்டில் அமைதியும், நீதியும் நிலைநிறுத்தப்படவும், வத்திக்கானுடன் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக அமையவும் செபங்களை எழுப்பினர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.