2012-02-27 14:57:07

திருத்தந்தையின் மூவேளை செப உரை


பிப்.27,2012. யோர்தான் ஆற்றில் தூய திருமுழுக்கு யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றபின், இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்டதை இத்தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலி வாசகத்தில் காண்கிறோம் என தன் ஞாயிறு மூவேளை செப உரையைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாலைவனம் என்பது பல்வேறு அர்த்தங்களை நமக்குத் தரலாம் என்ற பாப்பிறை, கைவிடப்படல், தனிமை என்ற நிலைகளைக் குறிப்பதாகவும், சோதனை, பலம்பெறும் மனிதனின் பலவீனத்தைக் குறிப்பதாகவும் காட்டப்படலாம் என்றார்.
பாலைவனத்தை ஒரு புகலிடமாகவும் நோக்கலாம் என்ற பாப்பிறை, எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து தப்பிய இஸ்ரயேல் மக்கள், பாலைவனத்தில் அடைக்கலம் தேடியதைச் சுட்டிக்காட்டி, அங்கு இறைப்பிரசன்னத்தை நாம் தனிப்பட்ட விதத்தில் உணரமுடியும் என்றார்.
இயேசு பாலைவனத்தில் சாத்தானால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த நிகழ்வு, நமக்குக் கற்றுத்தருவது என்ன என்ற கேள்வியையும் முன்வைத்த திருத்தந்தை, பொறுமை மற்றும் உண்மையான தாழ்ச்சி மூலம் நாம் நம் எதிரிகளைவிட பலம்பொருந்தியவர்களாக மாறமுடியும் என்றார்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் இயேசு விடுக்கும் 'மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்ற அழைப்பு, நாம் இத்தவக்காலத்தில் தினசரி செபம், ஒறுத்தல் மற்றும் சகோதரத்துவ பிறரன்பு செயல்கள் மூலம் இறைவனுடன் நாம் கொள்ளும் உறவை புதுப்பித்து மேம்படுத்த அழைப்பு விடுப்பதாக உள்ளது என தன் ஞாயிறு மூவேளை செப உரையில் மேலும் கூறினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.