2012-02-27 14:19:30

கவிதைக் கனவுகள்...... கற்ற பாடம்


நல்லவளாக இரு
நாணய மிக்கவளாக இரு
பெரியோரை மதித்து நட
பிறர் பற்றிக் குறை பேசாதே
இல்லாதோர்க்கு முகங் கோணாதே
இருப்பதைக் கொடுத்து வாழ்
தெய்வத்தைப் பற்றிக்கொள், அவரை எந்நிலையிலும் நம்பு
இவை அம்மா சொல்லிக் கொடுத்த பாடம்

நன்றாகப் படி
நல்ல மதிப்பெண்கள் எடு
நம்பிக்கையோடு நட
நேர்மையில் தவறாதே
செய்யும் தொழிலைத் தெய்வமாகப் பார்
நாலுபேர் மதிக்க நட
நானிலம் போற்றும் மனிதராய் வாழ்
இவை அப்பா சொல்லித் தந்த பாடம்

உண்மையை உயர்வெனக் கொள்
உழைப்பைத் திறமையெனக் கருது
உத்தமர் வாழ்வுதனைப் பின்பற்று
உள்ளம் உவந்து கொடு உள்ளதை
உள்ளத்தின் நிறைவாக இருக்கட்டும் சொற்கள்
உறுதியாய் இரு தேர்ந்தெடுத்த வாழ்வில்
உனக்காகக் காத்திருக்கின்றது நந்தவன வாழ்வு
இவை அண்ணன் சொல்லித் தந்த பாடம்

நல்லதையே நினை, நல்லதையே செய்
நாளும் செழிப்பாய் நால்வர் மத்தியில்.
நாளைகளை வெல்லுவாய்
நொடிப் பொழுதும் தவறாமல் காக்கிறார்
நீ நம்பும் உன் கடவுள்.
உன் வாழ்க்கைப் பாடம் இது.
இவை நண்பர் சொல்லித் தந்த பாடம்.

நல்ல பாடங்களைச் சொல்லித்தந்தவர்கள்
நல்லவர்களாகவே நடந்தார்கள் வாழ்க்கையில்
நல்லவர்கள் கிடைத்தது என் பேறு.
நல்லவளாக இருக்கவே நானும்...








All the contents on this site are copyrighted ©.