2012-02-25 14:15:53

திருத்தந்தை : குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்து சோர்வுற வேண்டாம்


பிப்.25,2012. குழந்தைப்பேறின்மை இல்லாதவர்கள் தங்களது திருமண வாழ்வுக்கான அழைப்பு குறித்துச் சோர்வுற வேண்டாமெனவும், அவர்கள் தங்களது திருமுழுக்கு மற்றும் திருமண அழைப்பின் மூலம், புதிய மனித சமுதாயத்தை உருவாக்குவதில் கடவுளோடு ஒத்துழைக்க எப்பொழுதும் அழைப்புப் பெறுகிறார்கள் எனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
குழந்தைப்பேறின்மையால் துன்புறும் தம்பதியர் மீது திருஅவை மிகுந்த அக்கறை காட்டுகின்றது எனவும், இதனாலே இக்குறைபாட்டைக் களைவதற்கு மருத்துவ ஆய்வுகளைத் திருஅவை ஊக்கப்படுத்துகின்றது எனவும் திருத்தந்தை மேலும் கூறினார்.
திருப்பீட வாழ்வுக் கழகம் வத்திக்கானில் நடத்திய 18 வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 200 பேரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
அறிவியல் ஆய்வானது எப்பொழுதும் மனிதரின் நன்மைக்காகச் செய்வதாக இருக்க வேண்டும் என்றும் உரைத்த அவர், குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டு விடயத்தில் நடத்தப்படும் ஆய்வுகள் அறிவியல் ரீதியாகச் சரியானதாக இருந்தாலும், அதோடு தொடர்புடையவர்களின் முழு மனிதமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
திருமணத் தம்பதியரின் ஐக்கியம் உடல் சார்ந்தது மட்டுமல்ல, ஆன்மீகம் சார்ந்ததும் ஆகும் என்று கூறிய திருத்தந்தை, குழந்தைப்பேறு இல்லாத தம்பதியரின் நியாயமான ஏக்கங்கள், அறிவியல்ரீதியாக நிறைவேற்றப்பட எடுக்கும் முயற்சியில் அவர்களின் மனித மாண்பும் முழுவதும் மதிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இவ்வியாழனன்று தொடங்கிய இக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டு மருத்துவர் Thomas W. Hilgers, அந்நாட்டில் 95 இலட்சம் பெண்கள் கருவுறுதல் தொடர்புடைய பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர் என்று கூறினார்.
மேலும், வளர்ந்த நாடுகளில் 15 விழுக்காட்டுத் தம்பதியரும், வளரும் நாடுகளில் 30 விழுக்காட்டுத் தம்பதியரும் குழந்தைப் பேறின்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பீட வாழ்வுக் கழகத்தின் அருட்பணி Pegoraro தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.