2012-02-24 15:07:16

திருத்தந்தை : பிறரன்புப் பணி, நற்செய்திப்பணியின் புதிய வடிவம்


பிப்.24,2012. தற்போதைய கலாச்சாரம், நன்மை தீமை குறித்த உணர்வை இழந்திருந்தாலும், தீமையை நன்மையால் வெல்ல முடியும் என்பதை கிறிஸ்தவர்கள் தங்களது முழு சக்தியுடன் வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
தேவையில் இருப்போரின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே நாம் அடுத்தவரிடம் பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இதன் மூலம், பிறரின் துன்பங்களைக் கண்டு ஒதுங்கும் நமது கடின இதயத்தையும் நம்மால் மாற்ற முடியும் என்றும் கூறிய திருத்தந்தை, நமது இதயங்களைக் கிறிஸ்துவின் இதயத்தோடு ஒத்திணங்கிச் செல்வதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Circolo San Pietro என்றழைக்கப்படும் உரோம் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் 35 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த போது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, பிறரன்புப் பணியானது, இயேசுவின் போதனையின் ஒளியில், நற்செய்திப்பணியின் புதிய வடிவமாக இருக்கின்றது என்றும் கூறினார்.
இவ்வமைப்பினர், ஆண்டுதோறும் புனித பேதுருவின் தலைமைப்பீட விழாவையொட்டி தன்னைச் சந்தித்து, தனது பிறரன்புப் பணிகளுக்கென நன்கொடைகளை வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இந்நன்கொடையானது, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவி கேட்பவர்க்குப் பயன்படுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.
கர்தினால் Iacobini யின் வழிகாட்டுதலில், உரோம் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளையோரால் 1869ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது Circolo San Pietro என்ற பிறரன்பு அமைப்பு. திருத்தந்தையர் வரலாற்றின் கடினமான நேரங்களில் அவர் மீதான தங்களது விசுவாசத்திற்குச் சான்று பகரவும், குருக்களுக்கு எதிரான போக்கிலிருந்து திருத்தந்தையைப் பாதுகாக்கவுமே இவ்வமைப்பு உருவானது. “செபம், செயல், தியாகம்” என்ற விருதுவாக்கைக் கொண்ட இவ்வமைப்பு, உரோம் நகரின் பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு உணவும் மற்ற உதவிகளையும் செய்து வருகின்றது.








All the contents on this site are copyrighted ©.