2012-02-24 15:06:46

குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டை அறநெறி வழிகளில் தீர்க்கும் முறைகள் குறித்த வத்திக்கான் கருத்தரங்கு


பிப்.24,2012. குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டை, செயற்கை முறையில் தீர்ப்பது குறித்த நடவடிக்கைகள் பல சமயங்களில் தேவையற்றதாகவும், ஒழுக்கநெறிக்குப் புறம்பானதாகவும் இருக்கின்றது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
குழந்தைப்பேறின்மைக் குறைபாட்டை அறநெறி வழிகளில் தீர்க்கும் முறைகள் குறித்து, திருப்பீட வாழ்வுக் கழகம் வத்திக்கானில் நடத்தி வரும் கருத்தரங்கு குறித்து பேட்டியளித்த அக்கழக அதிகாரி அருட்பணி Renzo Pegoraro இவ்வாறு தெரிவித்தார்.
நவீனத் தொழில்நுட்பப் பரிசோதனைக்கூடங்களில் கருவை வளரச் செய்வதில் பெரும் ஆபத்து இருக்கின்றது என்றும் அக்குரு கூறினார்.
வளர்ந்த நாடுகளில் 15 விழுக்காட்டுத் தம்பதியரும், வளரும் நாடுகளில் 30 விழுக்காட்டுத் தம்பதியரும் குழந்தைப் பேறின்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அருட்பணி Pegoraro தெரிவித்தார்.
இவ்வியாழனன்று தொடங்கிய திருப்பீட வாழ்வுக் கழகத்தின் 18 வது பொதுக் கூட்டம், இச்சனிக்கிழமை திருத்தந்தையைச் சந்திப்பதோடு நிறைவடையும். பிரேசில், எகிப்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து 16 வல்லுனர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.