2012-02-23 15:13:33

2015ம் ஆண்டிற்குள் 9கோடி மக்களை ஏழ்மையிலிருந்து முற்றிலுமாக விடுவிக்க ஐநா திட்டம்


பிப்.23,2012. ஏழ்மையை அகற்றுவதிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் விவசாயிகளும் கிராமப்புற மக்களும் தங்கள் சக்தியை உணர்ந்து செயல்பட உதவுவதன் மூலம், 2015ம் ஆண்டிற்குள் 9 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து முற்றிலுமாக விடுவிக்க ஐ.நா. நிறுவனம் தீர்மானித்துள்ளதாக ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
உலகின் சிறு விவசாயிகள் தங்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றி, உலகுக்கும் உணவு வழங்க முடியும் என்று கூறிய வேளாண்மை மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி அமைப்பு (International Fund for Agricultural Development) IFADன் தலைவர் Kanayo Nwanze, உணவு பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு விவசாயிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.
2050ம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை 900 கோடியைத் தாண்ட உள்ள நிலையில், உலகின் உணவு உற்பத்தி வளர்ச்சியும் அதற்கேற்றார்போல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
கிராமப்புற மக்கள் நகர்களுக்கு குடிபெயர்ந்து வரும் இன்றைய சூழலில், கிராமங்களைச் சார்ந்து இருக்கும் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்ற தன் கவலையையும் வெளியிட்டார் IFAD தலைவர் Nwanze.
உரோம் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் IFAD அமைப்பு, 1978ம் ஆண்டிலிருந்து இதுவரை, வளரும் நாடுகளின் ஏழை விவசாயிகளுக்கான சிறு வட்டிக் கடனாக 1370 கோடி டாலர்களை வழங்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.