2012-02-22 15:31:08

தென்கொரியாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் மேற்கொள்ளவிருக்கும் இராணுவப் பயிற்சிகளைக் கைவிட வேண்டும் - கொரியத் திருச்சபைகளின் தேசிய அவை


பிப்.22,2012. தங்களிடம் உள்ள இராணுவ சக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் தென் கொரிய அரசும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசும் வெகு விரைவில் மேற்கொள்ளவிருக்கும் இராணுவப் பயிற்சிகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும் என்று கொரியத் திருச்சபைகளின் தேசிய அவை தென் கொரிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
இம்மாதம் 27 முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரையிலும், பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் மேற்கொள்ளப்படவிருக்கும் இராணுவப் பயிற்சிகள் வட மற்றும் தென் கொரிய நாடுகளிடையே உருவாகியுள்ள பதட்ட நிலையை மேலும் மோசமாக்கும் என்று இந்தத் தேசிய அவை வலியுறுத்தியுள்ளது.
வட கொரியத் தலைவர் Kim Jong-il மரணத்தை அடுத்து, அந்நாட்டில் மார்ச் மாதம் இறுதி வரை நாடு தழுவிய துக்கம் கடைபிடிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் தவறானது என்று இந்த அவையின் உறுப்பினரான Kim Chang-hyun கூறினார்.
நடைபெறவிருக்கும் இராணுவ பயிற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையில் போரை உருவாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது என்று கொரியத் திருச்சபைகளின் தேசிய அவையின் பொதுச் செயலர் Kim Young-ju கூறினார்.








All the contents on this site are copyrighted ©.