2012-02-22 15:29:52

திருத்தந்தை: உடல்நலம், மீட்பு என்ற இரு எண்ணங்களுக்கும் இலத்தீன் மொழியில் ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது


பிப்.22,2012. கிறிஸ்தவர்களாகிய நமக்கு, நலவாழ்வு என்பது, வெறும் உடல் நலத்தை மட்டும் குறிப்பிடாமல், அதையும் கடந்து, முழு மனித மீட்பையும் உள்ளடக்கியது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தவக்காலத்தின் துவக்கமான இத்திருநீற்றுப் புதனன்று பிரேசில் ஆயர் பேரவை, ‘சகோதர நேயமும், பொதுநலனும்’ என்ற மையக்கருத்தில் துவக்கியுள்ள ஒரு முயற்சியைப் பாராட்டி, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Raymundo Damasceno Assisக்கு அனுப்பிய ஒரு செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
உடல்நலம், மீட்பு என்ற இரு எண்ணங்களையும் குறிப்பதற்கு இலத்தீன் மொழியில் ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுவதைத் தன் செய்தியில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கியபோது, அவரது பாவங்களை மன்னிப்பதாகக் கூறியதை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.
தவக்காலத்தின் ஓர் அங்கமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பிறரன்பு முயற்சிகளில் உடல் நலம் குன்றியோரையும், தனிமை, சமுதாயப் பிரிவுகள் போன்ற பிரச்சனைகளால் உள்ள நலம் குன்றியோரையும் பிரேசில் மக்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
"ஆண்டவரிடமிருந்தே உடல்நலம் உலகெல்லாம் நிலவுகிறது" என்று சீராக் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை மையமாகக் கொண்டு துவக்கப்பட்டுள்ள பிரேசில் ஆயர்களின் இந்த முயற்சிக்கு தன் முழுமையான ஆசீர் உண்டு என்றும் திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.