2012-02-21 15:08:24

சிரியாவில் அமைதிக்கானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வலியுறுத்தல்


பிப்.21,2012. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில், மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்புக்கள் அமைதிக்கானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளனர் கத்தோலிக்கத் தலைவர்கள்.
கடந்த ஆண்டில் லிபியாவில் நடைபெற்றது போன்று தற்போது சிரியாவிலும், அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்று வரும் வேளை, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்தியோக்கு மாரனைட் ரீதி கத்தோலிக்கப் பேராயர் Paul N. El-Sayeh.
சிரியாவில் எல்லா இடங்களிலும் வன்முறை காணப்படுவதால் குடிமக்கள் ஒவ்வொருவரும் துன்புறுகின்றனர் என்று, Aid to the Church in Need என்ற சர்வதேச கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திடம் தெரிவித்தார் பேராயர் El-Sayeh.
பிரச்சனைகளுக்கு வன்முறைகளால் தீர்வு காணப்பட முடியாது என்று கூறிய பேராயர், ஒவ்வொருவரும் சண்டையிடுவதைக் கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
சிரிய அரசுத் தலைவர் Bashar al-Assad க்கு எதிராகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 5,400 பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா.கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.