2012-02-21 15:07:17

இஸ்பெயின் கத்தோலிக்கப் பள்ளிகள், அந்நாட்டுக்கு 450 கோடி டாலருக்கு அதிகமான நிதியைச் சேமித்துக் கொடுக்கின்றன


பிப்.21,2012. ஏறக்குறைய 13 இலட்சம் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் இஸ்பெயின் கத்தோலிக்கப் பள்ளிகள், அந்நாட்டுக்கு 450 கோடி டாலருக்கு அதிகமான நிதியைச் சேமித்துக் கொடுக்கின்றன என்று, இஸ்பெயின் ஆயர்கள் பேரவையின் நிதி அலுவலகர் அறிவித்தார்.
இஸ்பெயின் ஆயர்கள் பேரவையின் பொருளாதார விவகாரங்களுக்கானப் பணிக்குழுவின் உதவிச் செயலர் Fernando Gimenez Barriocanal, Cope வானொலிக்கு அண்மையில் பேசிய போது இத்தகவலை வழங்கினார்.
நலவாழ்வைப் பாதுகாப்பதிலும், குடியேற்றதாரருக்கும் வீட்டு வன்முறைக்குப் பலியாகுவோர்க்கும் உதவுவதிலும், ஏழைகளுக்கு உணவு கொடுப்பதிலும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் இஸ்பெயின் திருஅவை இலட்சக்கணக்கான டாலர் பணத்தைச் செலவிடுகின்றது என்று Gimenez Barriocanal கூறினார்.
இஸ்பெயினில் 92 இலட்சம் வரி கட்டுவோர், தங்களது வரிப்பணத்தில் 0.7விழுக்காட்டையே கத்தோலிக்கத் திருஅவைக்கு வழங்குகின்றனர் என்ற அவர், இப்பணமும் அந்நாட்டின் 22,700 பங்குகளைப் பராமரிப்பதற்கும், நற்செய்திப்பணிக்கும், மூன்றாம் உலக நாடுகளில் இஸ்பெயின் ஆயர்கள் செய்யும் உதவிகளுக்கும், அகிலத்திருஅவையின் காரித்தாஸ் நிறுவனத்துக்கும் வழங்கப்படுகின்றது என்று விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.