2012-02-20 15:46:46

வாரம் ஓர் அலசல் – வேகம் வேண்டும் வெறி வேண்டாம்


பிப்.20,2012. RealAudioMP3 தொந்தரவு இல்லாமல் தியானம் செய்ய விரும்பிய துறவி ஒருவர், குகை ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அதன் உள்ளே சென்று இரகசிய அறையையும் கண்டுபிடித்தார். தியானம் செய்யவும் அமர்ந்தார். அமர்ந்தவர் எதிரே பார்த்தார். ஒரு கூடை நிறையத் தங்க நகைகள். கண்ணெதிரே காணும் இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். ஐயோ அம்மா...பேய்...பேய்...என்று அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார். கைகோர்த்தபடி அவ்வழியே வந்த மூன்று நண்பர்கள் துறவியை இடைமறித்து, என்ன ஆயிற்று, ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வருகிறீர் என்று கேட்டார்கள். அந்தத் துறவியும், சொல்லிக் கொண்டே ஓடினார் – ஐயோ, அந்தக் குகைக்குள் பை நிறைய பேய். நகைப் பேய். அங்கே போகாதீர்கள். அது உங்களைக் கொன்று விடும் எச்சரிக்கை என்று. அந்த மூன்று நண்பர்களும் விரைந்தோடி, அங்கிருந்த தங்கங்களைப் பார்த்து இன்ப அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பசி வயிற்றைக் கிள்ளுகிறது. அதனால் சாப்பிட்டுவிட்டு வந்து நகைகளைச் சமமாகப் பகிர்ந்து கொள்வோம் என்று சொல்லி நண்பர்களுள் ஒருவன் உணவு வாங்கப் போனான். மற்ற இருவரும் அவனுக்கெதிராகத் திட்டம் தீட்டினர். உணவு வாங்கச் சென்றவன் உணவோடு வந்தான். இவ்விருவரும் அவன்மீது ஒரே நேரத்தில் பாய்ந்து அவனைக் கொன்று போட்டனர். பின்னர், தங்க நகைகளைச் சம்மாகப் பிரித்துக் கொள்ளும் பேராசையில் மகிழ்வோடு சாப்பிட்டு முடித்தனர். சாப்பிட்ட வேகத்தில் வாயில் நுரை தள்ளி மயங்கிச் சாய்ந்தனர். ஏனெனில் உணவு வாங்கி வந்தவன் சாப்பாட்டில் விஷம் கலந்திருந்தான். ஓடிப்போன துறவி மீண்டும் அங்கு வந்தார். அந்த மூன்று பேரும் இறந்து கிடந்ததைக் கண்டார். பின்னர் சொன்னார் – நகைகள் பேயாவதில்லை, அவற்றை அடைவதற்கு வெறி பிடித்தவர்களே பேயாகிறார்கள் என்று.

அன்பு நேயர்களே, எதையும் அடைய வேண்டும், எதையும் சாதிக்க வேண்டும் என்பதில் வேகம் வேண்டும். ஆனால் அதனை அடையும் வழிகளில் வெறி இருக்கக் கூடாது. இந்தச் சிந்தனையோடு கடந்த வார நமது உலகத்தை ஒரு சுற்று வருவோம்.

மாலத் தீவுகள் நாட்டுத் தேசிய அருங்காட்சியகத்தில் இசுலாம் தீவிரவாதிகள் நுழைந்து தாக்கியதில் ஏறக்குறைய முப்பது புத்தமதச் சிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறு முகங்கள் கொண்ட தந்திர சாஸ்திர புத்தமதச் சிலை, அந்நாட்டின் Thoddoo தீவில் 1950களில் கண்டெடுக்கப்பட்ட 50 செ.மீ. அளவுடைய பவளக்கல் புத்தர் தலை உட்பட பல சிலைகள் சிதைக்கப்பட்டுள்ளன. Thoddoo தலை என்றழைக்கப்படும் இந்தப் புத்தர் தலை, ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தச் சிலைகள் எல்லாமே, மாலத் தீவுகள் நாட்டில் இசுலாமியருக்கு முந்தைய காலத்து வரலாற்றைச் சொல்லும் அடையாளங்கள். 2001ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், பிரமாண்டமான பாமியன் புத்தர் சிலையை அழித்தார்கள். அந்த வெறிச் செயலோடு இந்த வெறித்தனத்தை ஒப்பிடுகின்றனர் சமூகநல ஆர்வலர்கள்.(பிப்.15,2012)

எகிப்து நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் இசுலாம் தீவிரவாதிகள், மீட் பாஷர் என்ற கிராமத்தில் புனித மரியா மற்றும் புனித ஆப்ராம் ஆலயங்களுக்குத் தீ வைத்துள்ளனர். அதேசமயத்தில் 62 காப்டிக் ரீதிக் கத்தோலிக்கக் குடும்பங்களின் வீடுகளுக்கும் தீ வைக்க முயற்சித்துள்ளனர். Mourad Samy Guirgis என்ற கிறிஸ்தவத் தையல்கடைக்காரர், தன்னுடைய கைபேசியில் ஒரு முஸ்லீம் பெண்ணின் புகைப்படத்தை வைத்திருந்தார் என்று சில முஸ்லீம்கள் புகார் சொன்னதே இந்த வெறிச் செயலுக்குக் காரணம். எகிப்தில், அண்மைத் தேர்தல்களில் இசுலாம் கட்சிகள் வெற்றி அடைந்ததற்குப் பின்னர், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாடெங்கும் அதிகரித்துள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இத்தகைய கொலைவெறிகள் தீவீரவாதிகளை மட்டுமல்ல, பள்ளிச் சிறார், இளையோர் என எல்லா வயதினரையும் விட்டு வைப்பதாகத் தெரியவில்லை. சென்னையில் ஒரு தனியார் பள்ளியில், தனது ஆசிரியரையே, வகுப்பு மாணவன் குத்திக் கொன்றது, இன்னும், சில மாணவர்கள் சேர்ந்து குடித்துவிட்டு, அவர்களுடன் பழகி வந்த ஒரு சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று கற்பழித்தது, அமிர்தசரஸ் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவர்கள், தங்கள் சக மாணவரைத் துப்பாக்கியால் சுட்டது, இப்படிப் பல அதிர்ச்சி தரும் கொலைவெறிகள் பற்றிக் குறிப்பிடலாம்.

திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து புத்தமதத் துறவிகள் தீக்குளிப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய இந்தத் தீக்குளிப்புகளின் எண்ணிக்கை 25 என்று, ஓர் ஊடகச் செய்தி கூறுகிறது. Bongtak என்ற புத்தத் துறவிகள் இல்லத்தில், பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் செபக் கூட்டத்தை சீன அதிகாரிகள் இரத்து செய்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இம்மாதம் 17ம் தேதி காலை 6 மணிக்கு, 40 வயதாகும் Damchoe Sangpo என்ற துறவி தீக்குளித்து அந்த இடத்திலேயே இறந்துள்ளார். இந்தச் செயல் குறித்து கருத்து தெரிவித்த வியட்னாம் புத்தமதத் தலைவர் Thich Quang Do, தீ வைத்து உயிரை மாய்த்துக் கொள்ளுதல், மட்டுமீறிச் செல்வதாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அடிப்படை உரிமைகளும் மனித மாண்புகளும் அழிக்கப்படும் போது எதிர்ப்புத் தேவைதான். எத்தனையோ நாடுகள் இன்று மக்களாட்சியை அனுபவிக்கின்றன என்றால் அதற்குக் காரணம் அவர்களில் எழுந்த விடுதலைக்கான வேகம்தான், சுதந்திரத்திற்கானத் தாகம்தான். அடிமை வாழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த காந்திஜி, மார்ட்டின் லூத்தர், நெல்சன் மண்டேலா போன்றவர்களிடம் வேகம் இருந்தது. ஆனால் தங்களையே அழித்துக் கொள்ளும் அளவுக்கு வெறி இல்லை. இன்று மதத்தீவிரவாதிகள் செய்வதைப் போன்று அவர்களில் கொலைவெறி இல்லை. தங்களுக்குப் பிடிக்காத காரியம் நடக்கும் போது தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதாலோ அல்லது பிறரது உயிரை உறிஞ்சுவதாலோ, இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியுமா? சீனாவுக்கு எதிரான திபெத் புத்தமதத் துறவிகளின் தீக்குளிப்பு குறித்துப் பேட்டியளித்த, சீனப் பிரதமர் வென் ஜியாபோகூட, இச்செயலுக்கு மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்றும், இந்தத் தீக்குளிப்பு, திபெத்தின் உறுதியான தன்மைக்கு தடையாக இருக்கிறது என்றும்தான் கூறியுள்ளார். எனவே புத்தமதத் துறவிகளின் தீக்குளிப்பின் நோக்கம் தூக்கியெறியப்படுகிறது. ஓரிடத்தில் நடக்கும் அநீதியை எதிர்த்து ஒருவர் தீக் குளிப்பதால், அந்த அநீதிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக மனம் மாறுவதில்லை என்பதே உண்மை.

இன்றைய சமுதாயத்தில் வேகமாகச் செய்யப்பட வேண்டிய பல காரியங்கள் உள்ளன. இறைநம்பிக்கையில், செபம் செய்வதில், தானதர்மங்கள் கொடுப்பதில், நன்மையான காரியங்கள் செய்வதில், தீண்டாமையை ஒழிப்பதில், ஒவ்வொருவரையும் சகோதர சகோதரிகளாக மதித்து நடப்பதில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், பிறரை வாழ வைப்பதில், சண்டை சச்சரவுகளைத் தீர்த்துக் கொண்டு சமாதானமாக வாழ்வதில், பிறரை மன்னித்து வாழ்வதில், துன்பம் கொடுத்தவரிடம் மன்னிப்பு கேட்பதில், கையூட்டு வாங்காமல் இருப்பதில், வாங்கிய கடனை திருப்பித் தருவதில், நேர்மையாய் உழைப்பதில், இளையோருக்கு வாழக் கற்றுக் கொடுப்பதில் ....இப்படிப் பல காரியங்களில் வேகம் தேவைப்படுகின்றது.

இன்றைய உலகில் சிறாருக்குப் போதிய உணவு கிடைக்காததால், அடுத்த 15 ஆண்டுகளில், 50 கோடிச் சிறார் உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும் பாதிப்படைந்த நிலையில் வளருவார்கள். ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால், ஆண்டுதோறும் 26 இலட்சம் சிறார் இறக்கின்றனர் என்று Save the Children என்ற பிரிட்டன் பிறரன்பு அமைப்பின் புதிய அறிக்கை கூறுகிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி ஏற்றத்துக்குப் பின்னர், இந்தியாவிலும் பங்களாதேஷிலும் இலட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவைக் குறைத்துள்ளனர் எனவும் இவ்வறிக்கை கூறுகிறது. மேற்கு ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில் சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் பேர் பசிச்சாவை எதிர்நோக்குகின்றனர். இந்த மனிதாபிமான நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு தற்போது உரோமையில் கூட்டம் நடத்தி வருகிறது. இத்திட்ட அமைப்பின் தலைவர் Josette Sheeran பேசுகிறார்......

ஐரோப்பாவில் ஐந்தில் ஒருவர் வீதம், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்புடைய நோய்களால் இறக்கின்றனர். காற்று மண்டலம் அசுத்தமடைந்திருப்பதால் ஐரோப்பியர்களின் ஆயுள்காலம் சுமார் 9 மாதங்கள் குறைகின்றன. வீடுகள் போதுமான அளவு வெப்பப்படுத்தப்படாமை, நலவாழ்வு வசதிக் குறைவுகள் போன்றவைகளால் ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சம் பேர் இறக்கின்றனர். இவ்வாறு WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

அன்பர்களே, இன்றைய நமது சமுதாயத்தில் பசி பட்டினியால், நோய் நோக்காடால், சுற்றுச்சூழல் சீர்கேட்டால், பலர் இறக்கின்றனர். இவர்களின் பசியைப் போக்குவதில் நமக்கு வேகம் தேவை. இன்று மாணவர் மத்தியில் நடைபெறும் வெறிச் செயல்களை வைத்து ஒரு கல்வியாளர் சொல்கிறார் - வன்செயலில் ஈடுபடும் இளையோருக்குத் சமுதாயத்தில் வாழவும் தெரியவில்லை. பெற்றோரோ, ஆசிரியரோ அளிக்கும் அறிவுரையைக் கேட்டு புரிந்து கொண்டு செயலாற்றவும் கற்கவில்லை. பள்ளிக்கு செல்லும் வழியில், தெருவில் செல்லும் நாயைக் கல்லால் அடிப்பது, தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளின் மேல் கல் எறிவது போன்ற வன்செயல்களில் பல மாணவர்கள் ஈடுபடுவதைக் காண முடிகின்றது என்று. ஆம். கவிஞர் கண்ணதாசன் சொன்னது போன்று, நரம்புகள் முறுக்கேறி இருக்கும்போது வரம்புகள் மீறிப் போகின்றன. இரத்தம் சூடாய் இருக்கும் போது சித்தம் கல்லாகிப் போகின்றது. சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இன்று பல இளையோரின் வாழ்வு வீணாகின்றது.

ஆதலால் நமது வேகம் எதில் இருக்க வேண்டும் என்பது சொல்லாமல் புரிகின்றது. பொதுவாக, ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு சுமார் மூன்று இலட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் ஒளி பயணிக்கிறது. ஆனால், ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிக்கின்றன என்று, சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆய்வுக்கூடத்தின் அறிவியலாளர்கள் கடந்த வாரத்தில் செய்தியை வெளியிட்டுள்ளனர். எனவே அன்பர்களே, நல்ல செயல்களைச் செய்வதில் நாம் காட்டும் வேகம், இந்தத் துகள்களின் வேகத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும். ஆம். ஒரே ஒரு தீக்குச்சியின் உரசலில் உருவாகும் நெருப்பு, ஒரு மெழுகுவர்த்திக்குத் தாவி, பின் இன்னொன்றுக்குத் தாவி, ஆயிரக்கணக்கான வெளிச்சப் புள்ளிகளுக்கு விதையாகுவது போன்றது நல்ல செயல்கள். அவை நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும்!
எந்த ஒரு வெற்றியிலும் வெறியின்மையும், தோல்வியில் துவளாத வேகமும் நம் எல்லாருக்கும் வேண்டும்








All the contents on this site are copyrighted ©.