2012-02-20 15:22:27

இந்தியாவில் மத தீவிரவாதிகளின் போக்கு குறித்து கர்தினால் ஆலஞ்சேரி கவலை


பிப் 20, 2012. இந்தியாவில் தலத்திருஅவையின் வளர்ச்சியை ஓர் அச்சுறுத்தலாகக் காணும் தீவிரவாதக் குழுக்கள், அரசுக்குத் தவறானத் தகவல்களைத் தந்து கத்தோலிக்கர்களின் உரிமைகளைப் பறிக்க முயன்றுவருவதாகக் குற்றஞ்சாட்டினார் புதிய கர்தினால் ஜார்ஜ் ஆலங்சேரி.
கடந்த சனியன்று திருத்தந்தையால் கரிதினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேரில் ஒருவரான சீரோ மலபார் ரீதி திரு அவைத்தலைவர் கர்தினால் ஆலஞ்சேரி, இந்திய மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாகவே இருப்பினும் அவர்களின் ஆழமான விசுவாசமும் ஒன்றிப்பும் அகில உலக திருஅவைக்கு ஓர் உறுதியானச் செய்தியை வழங்க முடியும் என்றார்.
பலம் மிக்க பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்திய கத்தோலிக்கர்கள், தங்கள் விசுவாசத்தைக் காப்பாற்ற எந்த விலையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்றார் கர்தினால் ஆலங்சேரி. இந்தியாவில் மதத் தீவிரவாதம் மிகச்சிறிய அளவிலான மக்களாலேயே கைக்கொள்ளப்படுகிறது என்று கூறிய கர்தினால், மக்களின் வாக்குகளைப் பெற விரும்பும் சில அரசியல்வாதிகள் இந்த மதத்தீவிரவாதிகளுடன் கைக்கோர்ப்பது குறித்த கவலையையும் தெரிவித்தார்.
பெரும்பான்மை இந்துக்கள் மதசகிப்புத்தன்மையுடையவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் ஏனைய மதத்தவருடன் அவர்கள் அமைதியிலும் இணக்க வாழ்விலும் இணைந்து செயலாற்றி வருகின்றார்கள் என்ற பாராட்டையும் வெளியிட்டார் கர்தினால்.
இந்து மதத்திலிருந்து தலித் மக்கள் கிறிஸ்தவத்தில் நுழையும்போது அவர்களின் சலுகைகள் நிறுத்தப்படுவது குறித்த கவலையையும் வெளியிட்டார் கர்தினால் ஆலஞ்சேரி.








All the contents on this site are copyrighted ©.