2012-02-18 15:24:47

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 “இவ்வுலகத்தில் உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை தலாய்லாமாவிடம் கேட்டார்கள். அவர் சொன்ன பதில் நமது சிந்தனைகளை இன்று ஆரம்பித்து வைக்கிறது.
"இவ்வுலகில் என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது மனிதர்களே. அவர்கள் தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள்.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனிதர்கள் நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை... எதிர்காலத்திலும் வாழ்வதில்லை.
இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள்... இறுதியில் வாழாமலேயே இறந்து விடுகிறார்கள்." என்று தலாய்லாமா சொன்னார்.
வெகு ஆழமான வார்த்தைகள்... நமது ஞாயிறு சிந்தனைகளை ஆரம்பித்து வைக்க சிறந்த வார்த்தைகள்.

நலம் பற்றி நான்காவது வாரம்... கடந்த மூன்று வாரங்களாக நமது ஞாயிறு நற்செய்தி இயேசுவின் நலமளிக்கும் புதுமைகள் மூன்றை நமக்குச் சொன்னது. இன்றும் மற்றொரு புதுமையைச் சொல்கிறது - முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமை.
இயேசு ஆற்றியப் புதுமைகளை அவருடைய இறை வல்லமை வெளிப்படும் அருங்குறிகள் என்ற கோணத்தில் பார்ப்பது நம் வழக்கம். அதே நேரத்தில், இயேசு அந்தப் புதுமைகளை ஆற்றிய போது இருந்தச் சூழ்நிலை, அந்தப் புதுமைகளில் பங்கு பெற்றவர்கள் ஆகிய அம்சங்களையும் சிந்திப்பது பயனளிக்கும். இன்று அந்தக் கோணத்தில் நமது சிந்தனைகளை ஆரம்பிப்போம். இரு வாரங்களுக்கு முன் நாம் வாசித்த நற்செய்தியில், இயேசு சீமோனுடைய மாமியாரைக் குணமாக்கியபின், அங்கு நடந்ததை மாற்கு இவ்வாறு கூறினார்.
மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. (மாற்கு 1: 32-33)
இந்த வார்த்தைகளின் எதிரொலியாக இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள் ஒலிக்கின்றன.
சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. (மாற்கு 2: 1-2)
மாற்கு கூறும் இவ்விரு நிகழ்வுகளிலும் இயேசுவை நாடி கூட்டமாய் வந்தவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். அந்தக் கூட்டத்தில் ஒரு சில மறைநூல் அறிஞர்களும் இருந்தனர் என்று இந்த நற்செய்தியின் பிற்பகுதியில் வாசிக்கிறோம். இந்த மறைநூல் அறிஞர்கள் நலம் பெறுவதற்காகவோ, இயேசுவின் போதனைகளைக் கேட்பதற்காகவோ வரவில்லை. அவர்களது குறிக்கோள்... இயேசுவிடம் குறை காண்பது ஒன்றே. நலம் நாடிவந்த ஏழைகள், குறை தேடிவந்த அறிஞர்கள் என்ற இந்த இருவேறு வகைப்பட்டவர்களை நாம் சிந்திக்கும்போது, இந்தியாவில் தற்போது நிலவும் மருத்துவ உலகத்தைப் பற்றி எண்ணிப்பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவில் பலகோடி ஏழை மக்கள் நாடிச்செல்லும் மருத்துவ உதவிகளைப் பற்றி என் மனம் எண்ணிப்பார்க்கிறது. ஆஸ்த்மா நோயினால் துன்புறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளன்று ஆந்திராவின் ஐதராபாத் நகரில் நடைபெறும் மீன் மருத்துவத்தைத் தேடிச் செல்வதுபற்றி நமக்குத் தெரியும். அதேபோல், எலும்பு முறிவுக்கு தமிழ்நாட்டில் புத்தூர் எனுமிடத்தில் கிடைக்கும் மருத்துவ உதவிகள் பற்றியும் நமக்குத் தெரியும். கை, கால் இழந்தோருக்குச் செயற்கை உறுப்புக்களைப் பொருத்துவதில் புகழ்பெற்ற ஜெய்ப்பூர், வேலூரில் புகழ்பெற்ற CMC (Christian Medical College) மருத்துவமனை என்று பல இடங்கள் நம் மனக்கண் முன் விரிகின்றன.
மேலே குறிப்பிட்ட இந்த மருத்துவ உதவிகளுக்கு ஒரு பொதுவான அம்சம் உண்டு. இவை அனைத்துமே இலவசமாக, அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் மருத்துவ வசதிகள். அமெரிக்கா, ஐரோப்பா, இன்னும் பல நாடுகளில் மருத்துவத்திற்கு ஆகும் செலவைவிட, ஆசியாவில், குறிப்பாக, இந்தியாவில் ஆகும் செலவு மிக மிகக் குறைவு. இதைக்குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். அதேநேரம், இயேசுவின் குணமளிக்கும் செயல்களைக் குறை கூறுவதற்கென்றே வந்திருந்த மறைநூல் அறிஞர்களைப் போல், செலவு குறைந்த இந்த மருத்துவ உலகின் உதவிகளை குறைகூற, அல்லது இவைகளைத் தடுக்க அண்மையக் காலங்களில் ஆசிய நாடுகளில் படையெடுத்திருக்கும் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மருந்துகள் தயாரிப்பதைக் குறித்து, இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளாய் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. இம்மாதம் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விவாதிக்கப்பட உள்ளது. Novartis என்ற மருத்துவ நிறுவனம் தொடுத்துள்ள இந்த வழக்கு நமக்கு வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது. இவர்கள் தொடுத்திருக்கும் வழக்கின் சாராம்சம் இதுதான். இந்திய மருத்துவ நிறுவனங்கள் தாயரிக்கும் குறைந்த விலை மருந்துகளை உச்சநீதி மன்றம் தடை செய்ய வேண்டும் என்பதே Novartisன் வாதம்.
வீடு தீப்பற்றி எரியும்போது, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்குப் பதில், தண்ணீர் ஊற்றுபவர்களைத் தடை செய்யவேண்டும் என்று கூச்சலிடும் இந்த Novartis போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஒரே குறிக்கோள் என்ன?... எரியும் வீட்டிலிருந்து என்னென்ன பறிக்க முடியும் என்பது ஒன்றே.

முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமைக்கு மீண்டும் திரும்புவோம். இப்புதுமையில் நம் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஐந்துபேர்.... நான்கு பேர் நடந்து வந்தனர். ஒருவர் படுத்தபடியே வந்தார். இவர்கள்தாம் இன்றைய நிகழ்வின் நாயகர்கள். நடந்து வந்த நான்கு நண்பர்களும் ஒரு தீர்மானத்தோடு வந்திருந்தார்கள். பல ஆண்டுகளாய் செயல் இழந்து, படுக்கையில் இருக்கும் தங்கள் நண்பனைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் நண்பனின் இந்த அவலமான நிலையைக் கண்டு, இதுதான் அவனுக்கு வந்த விதி என்று அவன் வாழ்வையும் தங்கள் நம்பிக்கையையும் மூடிவிடாமல், அவனுக்கு என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு வழியில் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தவர்கள் இந்த நண்பர்கள். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டார்கள். தங்கள் நண்பனைக் கொண்டு வந்தார்கள்.
வந்த இடத்தில் மீண்டும் ஒரு தடங்கல். இயேசு இருந்த வீட்டில் பெரும் கூட்டம். அந்த கூட்டத்தில் இருந்த பல ஏழைகள் மத்தியில் பளிச்சென்று பகட்டாகத் தெரிந்தவர்கள் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள். வீட்டினுள் இருந்த இயேசுவிடம் தங்கள் நண்பனைக் கட்டிலோடு கொண்டு போகவேண்டுமெனில், இவர்களைக் கடந்து செல்ல வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. காரணம்? நோயாளி கடவுளின் சாபம் பெற்றவன், அவனைத் தொட்டாலோ, அல்லது அவன் தங்களைத் தொட்டாலோ, தாங்கள் தீட்டு பெறுவோம் என்பதால், நோயாளி கூட்டத்திற்குள் வந்துவிட்டான் என்று கண்டுபிடித்தால் அவனுக்கு உரிய தண்டனையை வழங்குவதிலேயே குறியாய் இருக்கும் கும்பல் இந்த அறிஞர்கள் கும்பல். தங்கள் நண்பனை இவர்களின் சித்திரவதைக்கு ஆளாக்காமல் இயேசுவிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று கொஞ்ச நேரம் குழம்பினார்கள். திடீரென தோன்றியது அந்த ஒளி, ஒரு புது பாதை தெரிந்தது. இயேசு நின்ற இடத்திற்கு மேலிருந்த கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன்பு இறக்கினார்கள். இவர்களது நம்பிக்கையை ஒரு வெறி என்று கூட சொல்லலாம்.
அவர்கள் செய்தது மிகவும் ஆபத்தான செயல். இயேசு போதித்துக்கொண்டிருந்த வீடு ஒரு மாளிகை அல்ல, எளிய வீடு. அந்த வீட்டுக் கூரையின் மீது நான்கு, ஐந்து பேர் ஏறினால், கூரை முழுவதும் உடைந்துவிடும் ஆபத்து உண்டு. வீட்டின் கூரை முழுவதும் உடைந்திருந்தால்... கீழே இருந்த பலருக்கும், இயேசுவுக்கும் சேர்த்து ஆபத்து. இப்படி பல வகையிலும் ஆபத்து நிறைந்த செயலை அவர்கள் செய்தனர். இதைத்தான் வெறி என்று சொன்னேன். அந்த நம்பிக்கை வெறிக்கு நல்லதொரு விடை கிடைத்தது.
“இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு…” என்று இன்றைய நற்செய்தியின் 5ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுபவை. ஆம்... கட்டிலில் கிடந்த நோயாளரின் நம்பிக்கையை விட அவரைத் தூக்கிவந்தவர்களின் நம்பிக்கை இயேசுவை அதிகம் கவர்ந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இயேசு அவரை குணமாக்கினார்.

பல குணமளிக்கும் நிகழ்வுகளில், குணமிழந்தவருக்கு மட்டும் குணமளிக்காமல், சுற்றி நிற்கும் பலருக்கும் குணமளிக்கிறார் இயேசு. தொழு நோயாளியைத் தொட்டு குணமாக்கினார் என்று சென்ற வாரம் பார்த்தோம். அந்தத் தொடுதலினால், சுற்றி நின்றவர்களையும் இயேசு குணமாக்கினார். இன்று மீண்டும் இயேசு அதையேச் செய்கிறார். முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, "குணம் பெறுக" என்று சொல்லியிருந்தால் போதுமானது. ஆனால், இயேசு அவரிடம், "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறுகிறார். அதனால் பிரச்சனை எழுகிறது. பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்வது இயேசுவுக்குக் கைவந்த கலையோ என்றுகூட நான் சில சமயங்களில் எண்ணுவதுண்டு.
ஆழமாக சிந்தித்தால், பிரச்சனைகளை வளர்ப்பதற்கல்ல... மாறாக, பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்காக இயேசு எடுத்துக்கொண்ட முயற்சி இது என்பதை உணர்வோம்.. முடக்குவாதமுற்றவரது உடலை மட்டும் இயேசு குணமாக்க விரும்பவில்லை. அது முழு குணம் ஆகாது என்பது அவருக்குத் தெரியும். மாறாக, இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்த சமுதாயத்தின் மேல் அவர் வளர்த்துக்கொண்ட கசப்பு, வெறுப்பு என்ற பாவங்களையும் நீக்கி அவருக்கு முழு குணம் அளிக்கவே, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்று கூறினார்.
இயேசு அவருடைய பாவத்தை மட்டுமல்ல சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும் மன்னிக்கிறார். முக்கியமாக, முடக்குவாதமுற்றவர் மீது தவறானத் தீர்ப்புகள் அளித்து அவரையும் தங்களையும் இதுவரை கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர், மறைநூல் அறிஞர், மக்கள் எல்லாருடைய பாவங்களையும் இயேசு மன்னிக்கிறார்.

கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும் என்ற பழமொழியை நாம் கேட்டிருக்கிறோம். இங்கோ, கூரையைப் பொத்துக் கொண்டு குறையுள்ள ஒருவர் இறங்கினார். வீட்டுக்குள்ளிருந்து மன்னிப்பும், அருளும் பீறிட்டு எழுந்தது. அப்போது அந்தப் புதுமையும் நிகழ்ந்தது. பல வருடங்களாய் கட்டிலோடு முடங்கிப்போனவர் தட்டுத்தடுமாறி எழுந்தார். தன் கால்களில் அவர் உணர்ந்த வலிமை, உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் பரவியுது. தன்னை இதுவரைச் சுமந்துவந்த கட்டிலை அவர் சுமந்து வெளியே சென்றார். அவர் உள்ளே வருவதற்கு இடம் தராத அந்தக் கூட்டம், வியப்புடன், மரியாதையுடன் வழிவிட, அவர் கம்பீரமாய் வெளியே சென்றார். வீட்டின் கூரைமீது நின்று இந்த அற்புதத்தைக் கண்ட நண்பர்கள் இயேசுவுக்கு அங்கிருந்தபடியே நன்றி சொல்லிவிட்டு அவசரமாய் இறங்கிவந்து நண்பனுடன் மகிழ்வாக சென்றனர். வரும்போது அவரைச் சுமந்து வந்த கட்டிலை அவர்கள் எல்லாரும் சேர்ந்து குப்பையில் எறிந்து விட்டு போயிருக்க வேண்டும்.

இயேசுவிடம் வந்துவிட்டால், சுமைகளைத் தூக்கி குப்பையில் எறிந்து விடலாம். சுமைகளைச் சுமந்து, அல்லது, சுமைகளைப் பிறர் மீது சுமத்தி வாழ்ந்து வரும் நாம், நமது சுமைகள் தீர இயேசுவை நாடி வருவோம். அவர் நமது சுமைகளை நீக்குவார். சுகம் தருவார்.








All the contents on this site are copyrighted ©.