2012-02-17 14:37:44

ஹொண்டுராஸ் நாட்டின் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தோர்க்குத் திருத்தந்தையின் அனுதாபம்


பிப்.17,2012. ஹொண்டுராஸ் நாட்டின் Comayagua நகரின் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தோர்க்கானத் திருத்தந்தையின் செபம் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் தந்தி ஒன்றைத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருத்தந்தையின் பெயரால் அந்நகரின் ஆயருக்கு அனுப்பியுள்ளார்.
இன்னும், Comayagua நகரின் சிறையில் ஏற்பட்ட தீ விபத்து, அந்நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள மிகத் துன்பகரமான நிகழ்வு என்று தலத்திருஅவை தனது கவலையை வெளியிட்டுள்ளது.
Comayagua ஆயர் Roberto Camilleri சார்பாக, அறிக்கை வெளியிட்ட ஹொண்டுராஸ் காரித்தாஸ், கொள்ளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள சிறைகளின் மனிதமற்ற நிலைகளையும், அங்கு காணப்படும் பாதுகாப்பற்ற சூழல்களையும் குறை கூறியுள்ளது.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவசரத் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதற்கு உதவிகள் வழங்கப்படுமாறும் காரித்தாஸ் கேட்டுள்ளது.

Comayagua சிறையில் இப்புதன் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 355 பேர் இறந்துள்ளனர் மற்றும் 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
250 பேருக்கென கட்டப்பட்ட இந்தச் சிறையில் 852 கைதிகள் வைக்கப்பட்டு இருந்தனர் எனவும், ஹொண்டுராஸ் நாட்டில் எட்டாயிரம் பேர் இருக்கக்கூடிய சிறை ஒன்றில் 13 ஆயிரம் பேர் இருக்கின்றனர் எனவும் ஊடகங்கள் குறை கூறியுள்ளன.
இதற்கிடையே, இத்தீ விபத்து குறித்து புலன் விசாரணை நடத்தப்படும் எனவும், இந்நாட்டில் சிறை அமைப்புக்களில் சீர்திருத்தம் தேவை எனவும் அரசுத்தலைவர் Porfirio Lobo அறிவித்துள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராசின் San Pedro Sula சிறையில், 2004ம் ஆண்டில் தீ விபத்து ஏற்பட்டு 107 கைதிகள் இறந்தனர். அச்சமயத்திலும் அரசு இவ்வாறு கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.