2012-02-17 14:39:36

புதுடெல்லியில் நடத்தப்பட்ட நிலநடுக்க எச்சரிக்கைப் பயிற்சிமுறைகளுக்கு ஐ..நா.பாராட்டு


பிப்.17,2012. நிலநடுக்கம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் விதம் குறித்து புதுடெல்லியில் நடத்தப்பட்ட பயிற்சிமுறைகளை வரவேற்றுள்ளவேளை, உலகில் நிலநடுக்கத்தால் எளிதில் தாக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள மற்ற நகரங்களும் புதுடெல்லியின் நடவடிக்கையைப் பின்பற்றுமாறு ஐ.நா.அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.வின் அனைத்துலக பேரிடர்க் குறைப்பு யுக்திகள் (UNISDR) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு கோடியே 67 இலட்சம் பேர் வாழும் புதுடெல்லியில், 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்படும் சூழலில், குடிமக்கள் எவ்வாறு தயாராகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் பயிற்சிமுறையில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி அரசின் இம்முயற்சியைப் பாராட்டியுள்ள இந்த ஐ.நா.அமைப்பின் தலைவர் Margareta Wahlström, உலகின் மற்ற நகரங்களும் புதுடெல்லியைப் பின்பற்றிச் செயல்படுமாறு கேட்டுள்ளார்.
நிலநடுக்கத்தால் தாக்கப்படக்கூடிய நகரங்களில் 37 கோடிப் பேர் வாழ்கின்றனர் என்றும், இவ்விடங்களில் நிலநடுக்கத்தால் தொடர்ந்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
5 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நகரங்களில் ஒன்றாக புதுடெல்லி கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்புதனன்று நடத்தப்பட்ட இப்பயிற்சிமுறையில், 276 பேர் இறந்தது போலவும், சுமார் 828 பேர் பலத்த காயமடைந்தவர்களாகவும், 1897 பேர் சிறு காயமடைந்தவர்களாகவும் நடிக்க வைக்கப்பட்டனர். அச்சமயத்தில், மாநகரின் ஆறு பாதாள இரயில் நிலையங்கள் அரைமணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டிருந்தன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.