2012-02-17 13:42:28

பிப் 17, 2012. கவிதைக் கனவுகள்.......... மரணதண்டனைக்கு ஒரு சாவுமணி.


மரணத்திற்கு மரணம் பதிலென்றால்,
கொலைக்கு கொலையே விடையென்றால்,
குற்றத்திற்கு மரணமொன்றே தீர்வென்றால்,
என் இழப்பின் பெருவலிக்கு
மரணதண்டனைதான் மருந்தென்றால்,
மன்னிப்பின் மகிமைதான் என்ன?
திருத்தமுடியும் என்ற நம்பிக்கையின்
விலைதான் என்ன?

தண்டனையை நீக்கினால் தவறு பெருகும் என்றால்
அச்சத்தை ஆதாரமாக வைத்து சமூக ஒழுங்குமுறை
கட்டிக் காக்கப்படுவது உண்மையாகுமே!.
தண்டனையின் நோக்கம் திருத்தமா?
பிறரை பயமுறுத்தும் பாடமா?
தவறிழைத்தவன் திருந்தவே தண்டனை எனும்போது
கண்ணுக்கு கண் சட்டம் கொண்டு
விழியிழந்தோர் சமூகம் படைக்க முயல்வதேன்?

உயிர் யாருடையதாயினும் மதிப்புடையதே.
இயற்கையின் உரிமை செயற்கையாய்
இன்று நம் கைகளில்.
அகிம்சா வழி தேசத்திற்கு இது அழகா?

தூக்குக் கயிறுகள் வெற்றியடையும்போது,
குற்றங்களைத் தடுக்கத் தவறிய நம் குற்றமும்,
திருத்தவே முடியாது என்ற நம்
ஒப்புதல் வாக்குமூலமும் சேர்ந்தே வெல்கின்றன.
நீதி தேவதை வெண்துணியால் கண்களைக்
கட்டிக்கொண்டு நிற்பதும் அதனால்தானோ?.








All the contents on this site are copyrighted ©.