2012-02-17 14:38:37

சந்தைகளில் பொருள்கள் பரிமாறப்படுவது போன்று, ஆயுத வியாபாரம் நோக்கப்படக் கூடாது - பேராயர் Chullikatt


பிப்.17,2012. நாடுகளுக்கிடையே பொறுப்புள்ள ஒத்துழைப்பு, ஆயுதத் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம், பொதுமக்கள் சமுதாயத்துடன் தோழமை ஆகியவை வழியாக, உண்மையான அமைதிக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு, அனைத்துலக ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் முக்கிய அங்கம் வகிக்கக்கூடும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.
அனைத்துலக ஆயுத வியாபார ஒப்பந்தம் குறித்த ஐ.நா.கூட்டத்திற்குத் தயாரிப்பாக, நியுயார்க்கில் இவ்வெள்ளியன்று முடிவடைந்த 5 நாள் ஐ.நா.கூட்டத்தில் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Francis A. Chullikatt, ஆயுத வியாபாரத்தைத் தடை செய்வதற்கு தற்போது எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், அனைத்து நாடுகளின் அர்த்தமுள்ள அரசியல் ஆர்வத்தைக் குறித்து நிற்கின்றன என்று கூறினார்.
உலக அல்லது உள்ளூர்ச் சந்தைகளில் பொருள்கள் பரிமாறப்படுவது போன்று, ஆயுத வியாபாரம் நோக்கப்படக் கூடாது என்றும் உரைத்த பேராயர் Chullikatt, மனித வாழ்வும் மனித மாண்பும் மதிக்கப்படுவதற்கு உலகம் தாகம் கொண்டுள்ளது என்பது, இந்த ஆயுத வியாபாரத் தடைக்கு அடிப்படையாக அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.