2012-02-14 14:59:05

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 103


RealAudioMP3 மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு இல்லாத வசதிகள் இல்லை. மாளிகை போன்ற வீடு, கார், கூப்பிட்ட குரலுக்கு வேலைசெய்ய ஆட்கள், நகரின் நான்கு மூலைகளிலும் பெரிய தொழிற்சாலைகள், பெயர், புகழ், அந்தஸ்து, வசதி வாய்ப்பு என வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். ஒரே மகள் என்பதால் அதிக அன்பும், பாசமும், கரிசனையும், செல்லமும் ஊட்டி வளர்த்துவந்தார். மகள் என்றால் அவருக்கு உயிர். அவளுக்கு ஒன்றொன்றையும் பார்த்து பார்த்து செய்தார். உணவு, உடை, படிப்பு என எல்லாவற்றிலுமே மிகச் சிறப்பானதையே கொடுத்தார். ஆகமொத்தத்தில் அவர் மகள்தான் அவருக்கு எல்லாமே. அப்படிப்பட்ட மகள் ஒருநாள் அவரிடம் வந்து, “அப்பா நான் என்னுடன் கல்லூரியில் படிக்கும் இளைஞன் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரையே மணக்க விரும்புகிறேன்” என்று சொன்னாள். அந்த இளைஞன் பரம ஏழை. எனவே அந்தஸ்தைக் காரணம் காட்டி, “வேண்டாம், இது நடக்காது, மனதை மாற்றிக்கொள்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் தந்தை. ஆனால் அடுத்தநாள் இருவரும் மாலையும் கழுத்துமாக அவர் முன் நின்றனர். இதைக் கண்ட அவருக்கு அதிர்ச்சி, ஆத்திரம்... ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “நான் உனக்கு என்ன குறை வைத்தேன். எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தேனே, அதற்கு நீ காட்டும் பதில் இதுதானா? என் முகத்தில் விழிக்காதே” எனச்சொல்லி இருவரையும் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினார். தன் சொத்துக்களையெல்லாம் அநாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விட்டு, இறுதிவரை தன் மகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளாமலேயே இறந்து போனார்.

அன்பார்ந்தவர்களே நான் இப்பொழுது சொன்னது கதையல்ல. உண்மை நிகழ்வு. இதை ஒத்த நிகழ்வுகளை நிச்சயமாக நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்நிகழ்வில் சொல்லப்பட்ட தந்தை செய்தது சரியா? தவறா? எனக்கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும்? பிள்ளைகளைப் பெற்று, இருபது, இருபதைந்து ஆண்டுகள் வளர்த்தெடுத்து, வேண்டியதையெல்லாம் பார்த்து பார்த்து செய்து, ஆளாக்கிய பெற்றோர்கள், தந்தை செய்தது சரி என்றுதான் சொல்வார்கள். அவர்கள் சொல்வதுபோல தந்தை செய்தது சரியென்றால், நான் உன் மேல் அளவற்ற அன்பு காட்டுவேன், என் உயிரைவிட உன்னை மேலாகப் பார்த்துக் கொள்வேன். ஆனால் நீ நான் சொல்வதைக் கேட்கவேண்டும், நான் சொல்வதைக் கேட்கத்தவறினால் உன்னை முற்றிலும் வெறுக்கவும் செய்வேன் என்பதுதானே பொருள். நான் சொல்வதைக் கேட்காவிட்டாலும், உன்னை மன்னித்து ஏற்றுக்கொண்டு எப்போதும் போல அன்பைப் பொழிவேன் எனச்சொல்லும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

அன்பார்ந்தவர்களே, நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 103. இத்திருப்பாடலிலே தமக்கும், தன் நாட்டு மக்களுக்கும் தந்தையாம் இறைவன் செய்த அளப்பரியக் கொடைகளை ஆசிரியர் நினைவு கூர்கிறார். இறைவன் செய்த எல்லா நன்மைகளுக்கும் ‘என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு’ என்று ஆர்ப்பரிக்கிறார். இறைவனுடைய அன்பும், பரிவும், கனிவும், இரக்கமும் பழைய ஏற்பாட்டிலே வேறெங்கும் காணமுடியாத அளவு இத்திருப்பாடலில் விளக்கப்படுகிறது. இதைப் படிக்கும்போதே இறைவன் எனக்குச் செய்த நன்மைகள் என் கண்முன் வருகின்றன. இத்திருப்பாடல் இறைவன் நமக்குச்செய்த நன்மைகளை நினைத்து நன்றிகூற மிகச் சிறந்தது. நன்றி கூற இத்திருப்பாடல் சிறந்ததெனினும் இறைவனின் பேரன்பு வழித்தோடுகின்றத் திருப்பாடலாகவும் அமைந்திருக்கிறது.
வழக்கமாக பிறர்பால் நமக்கிருக்கும் அன்பை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம்? பொருளைக் கொடுப்பதன் வழியாக, அன்புக்குரியவர்களைப் பேணிக்காப்பதன் வழியாக, தேவையானவைகளைத் தாமே உடனிருந்து செய்வதன் வழியாக என அடுக்கிக் கொண்டே போகலாம். அவை எல்லாமே மனிதர்களாகிய நமது கண்ணோட்டம். பிறர்பால் கொண்ட அன்பை வெளிப்படுத்த இறைவன் பயன்படுத்தும் இரு மாபெரும் மதிப்பீடுகள் மன்னிப்பு மற்றும் பேரிரக்கம்.
பணம் கொடுப்பதிலும், பொருள் கொடுப்பதிலும், பேணிக்காப்பதிலும் மட்டும் அன்பு முழுமை பெறாது. மாறாக அன்பு செய்யப்படுபவர் தன் அன்பை உதறித் தள்ளிப் பிரிந்து சென்றாலும், அன்பு செய்பவர் அவர்பால் பேரிரக்கம் கொண்டு அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டு, அதே அன்பையும் பாசத்தையும் வழங்கும் போதுதான் அன்பு முழுமையடைகிறது. இத்திருப்பாடல் முழுவதையும் வாசித்து முடித்த பிறகு என் உள்ளத்தில் தோன்றியக் கருத்து இதுதான். இத்திருப்பாடல் முழுவதுமே இறைவனின் பேரன்பும், நிபந்தனையற்ற அவரது மன்னிப்பும் தான் காணக்கிடக்கின்றன.

திருப்பாடல் 103: 3, 4, 8, 9, 10, 13 மற்றும் 17 திருவசனங்கள்
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.

நம் அன்புக்குரியவர்கள் எவரேனும் தவறு செய்துவிட்டால் நமது மனநிலை எப்படி இருக்கும்? நாம் பதிலளிக்கும் முறை எப்படி இருக்கும்? முதலில் கோபம் வரும். வார்த்தைகளால் வசை பாடுவோம். சில சமயங்களில் அடிக்கவும் செய்து தண்டனை கொடுப்போம். அதோடு முடிந்து விட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அதன்பிறகு செய்த தவறுகளுக்கு ஏற்ப, குற்றங்களுக்கு ஏற்பத்தான் நடத்துவோம். இதுதான் மனித இயல்பு. ஆனால், தந்தையாம் இறைவன் மன்னிப்பதோடு சேர்ந்து மறக்கவும் செய்கிறார். நீ தவறுசெய்து விட்டாய், தவறுசெய்தவர் தண்டனைக்குரியவர். எனவே உன்னை உன் குற்றங்களுக்கு ஏற்ப நடத்துவேன் எனவும், உனக்குத் தண்டனை வழங்குவேன் எனவும் சொல்லவில்லை. மாறாக, முழு மனதோடு எல்லா குற்றங்களையும் மன்னிக்கிறார்.
இறைவன் முதலில் தவறு செய்தவரின் சூழலைப் புரிந்து கொள்கிறார். அவரது மனநிலையைப் புரிந்து கொள்கிறார். தூய பவுல் சொல்வதைப்போல மனிதர்கள் நன்மைசெய்யவே விரும்பினாலும் அது முடியாமல் சில சமயங்களில் தீமை செய்துவிடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார்.

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதம் பிரிவு 7 சொற்றொடர்கள் 15 மற்றும் 21
ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.
நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன்.

இங்கே வழக்கமாக நாம் செய்ய மறக்கிற ஒரு காரியத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நம் வாழ்விலும் இதே போன்ற சூழல் வந்தது நாமும் இதே போல தவறு செய்தோம். நாம் மன்னிக்கப்பட்டோம். அதன் பிறகு அது போன்ற தவறுகளை செய்வதில்லை. எனவே நமக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டதைப் போல பிறருக்கும் வாய்ப்புக்கொடுக்க வேண்டும் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
எந்தக் காரியத்திலே தவறு செய்தார்களோ அதே காரியத்தை மீண்டுமாக அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்படும்போதுதான் நமது மன்னிப்பும், அவர்கள்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையும் அவர்களுக்குத் தெரியும். இச்செயல் கல்லான இதயம் கொண்டவர்களையும் மாற்றிவிடும். இதன் பிறகு தவறு செய்தவர்கள், ஏன் இதைச் செய்தோம்? என நாணுவார்கள். அவர்கள் செய்த தவறு நிபந்தனையின்றி மன்னிக்கப்பட்டு, மீண்டுமாக அதே அன்பும், பாசமும் கொடுக்கப்படும்போது, அதை மிகப்பெரிய கருவூலமாகக் கருதுகிறார்கள். அவர்கள் செய்த தவறை வாழ்வில் மறுமுறை கண்டிப்பாகச் செய்யமாட்டார்கள். அன்பார்ந்தவர்களே, தந்தையாம் இறைவன் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். ஏனெனில் அவர் தவறு செய்த அன்புக்குரியவரின் மனநிலையிலிருந்து பார்க்கிறார். நாமும் அப்படி நினைத்துப்பார்க்கும் போது, நம் தந்தையாம் இறைவனைப் போல மன்னித்து ஏற்றுக்கொள்ளும் நல்ல பிள்ளைகளாக வாழ முடியும்.
மனிதர்கள் செய்யாத, நினைத்துக்கூடப் பார்க்காத இன்னொரு சிறப்பான குணம் தந்தையாம் இறைவனிடம் இருப்பதாக திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். தவறு செய்தவரை மன்னிப்பதே பெரிது என நினைக்கும் நாம் அவரைக் குணப்படுத்த நினைப்போமா? நம் அன்புக்குரியவர் நம்மை விட்டு பிரிந்து சென்று தவறுசெய்கிறார். அந்தத் தவறால் அவர் காயமடைகிறார். இறுதியில் அவர் எதிர்பாராதவாறு அவர் செய்த தவறு மன்னிக்கப்பட்ட பிறகு அவருக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறது. அக்குற்ற உணர்வு அக்காயத்தை மேலும் அதிகரிக்கிறது. இவ்வாறான காயங்களைக் குணப்படுத்துவதும், அந்நேரங்களில் ஆற்றுப்படுத்துவதும், தேற்றுவதும் அன்புக்குரியவரின் கடமை என்பதை இறைவன் உணர்த்துகிறார்.

அன்பார்ந்தவர்களே! பேரன்பு என்பது மன்னிப்பிலே தான் முழுமையாக வெளிப்படுகிறது என்பதற்கு விவிலியத்திலிருந்து ஓர் உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். நமக்கு நன்கு அறிமுகமான ஊதாரி மைந்தன் உவமையை எடுத்துக் கொள்வோம். ஊதாரி மைந்தன் உவமையில் கதாநாயகன் யார்? ஆங்கில அகராதிப்படி, கதாநாயகன் என்பவன் சக மனிதர்களைக் காட்டிலும் மேலோங்கிய திறமை, தைரியம், வீரம், நற்பண்புகளைக் கொண்டவர். நமது நாடகங்களிலும், திரைப்படங்களிலும் கதாநாயகன் அதிகப்படியான காட்சிகளில் வருவது வழக்கம். அவர்தான் கதைக்குத் தேவையான திருப்புமுனைகைளை ஏற்படுத்துவார். இதுதான் கதாநாயகனைப் பற்றிய பொதுவானக் கண்ணோட்டம். இதன் பின்னணியில் பார்க்கும் போது, ஊதாரி மைந்தன் உவமையில், ஊதாரி மைந்தன் கதாநாயகன் இல்லை. மாறாக, ஊதாரி மைந்தனின் தந்தைதான் கதாநாயகன். சில காட்சிகளில் வந்தாலும் அவ்வுவமையில் வருகிற கதாபாத்திரங்களில் சிறந்தவராக, நற்பண்புகளைக் கொண்டவராக நம் கண்முன் நிற்பது தந்தை தான். தந்தை கதாநாயகனாக உயர்ந்து நிற்பதற்கான காரணம் என்ன? அவர் மகன் மீது கொண்ட பாசம் என்று சொல்வதைவிட அந்தப் பாசத்தை மறந்து சென்று வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வந்த மகனை ஓடோடி சென்று, அரவணைத்துக் கொள்ளும் தந்தையின் மன்னிக்கும் பேரன்பே காரணம். எனவே அன்பு என்பது பணம் கொடுப்பதிலும், பொருள் கொடுப்பதிலும், பேணிக்காப்பதிலும் மட்டும் முழுமை பெறவதில்லை. மாறாக, அன்பு செய்யப்படுபவர் தன் அன்பை உதறித் தள்ளிப் பிரிந்து சென்றாலும், அன்பு செய்பவர் அவர்பால் பேரிரக்கம் கொண்டு அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டு அதே அன்பையும் பாசத்தையும் வழங்கும்போதுதான் அன்பு முழுமையடைகிறது.








All the contents on this site are copyrighted ©.