2012-02-14 15:05:59

மியான்மாரில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு குழு கவலை


பிப்.14,2012. மியான்மாரின் கச்சின் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் மிகப்பெரிய அளவில் தொடர்வதாக அந்நாட்டில் அண்மையில் பயணம் மேற்கொண்டு திரும்பிய உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கொல்லப்படுவது, பாலியல் வன்முறைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாவது, வீடுகளும் கோவில்களும் சேதமாக்கப்படுதல் போன்றவை தொடர்ந்து இடம்பெறுவதாக அம்மாநில மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று CSW என்ற இந்த அமைப்பு அறிவிக்கிறது.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது, ஆங் சான் சூ கீயும் அவரின் கட்சியும் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளது போன்ற நல்ல மாற்றங்கள் இடம்பெறுகின்ற போதிலும், உரிமை மீறல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக இக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மியான்மாரின் அனைத்து தேசிய இனங்களையும், மக்களாட்சி இயக்கங்களையும் ஒன்றிணைத்து அரசியல் ரீதியானப் பேச்சுவார்த்தைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.