2012-02-14 14:58:34

கவிதைக் கனவுகள் காதலை விடுதலை செய்ய வேண்டும்


காதலர் தினம்...
எதிர்பார்ப்பை, ஏமாற்றத்தை,
பரபரப்பை, பரிதவிப்பை உருவாக்கும் நாள்.
காதலர்களுக்கு அல்ல... வியாபாரிகளுக்கு.
காதலை நம்பி, காதலர்களை நம்பி
முதலீடு செய்தவர்கள் வியாபாரிகளே.

முதலீடு ஏதும் இன்றி
முதலில் யார் என்ற பேதமின்றி
முதல் பார்வையில் தோன்றி
முதுமை வரை வளர்வது காதல் என்று
முன்னோர் சொன்ன இலக்கணம்
இன்றோ பழைய புராணம்.

முதலீடு வேண்டுமென்றும்
'முதலில் எடு' என்றும்
காதலைக் கடைச் சரக்காக்கி,
சாதனைகள் செய்கிறது வியாபார உலகம்.
வியாபாரிகள்...
காதலுக்கு தினம் குறித்தனர்
கடைகளில் பொருள் குவித்தனர்
காதலுக்கு விலை குறித்தனர்
மோதலுக்கு வழி வகுத்தனர்.
வரம்பு மீறிய ஆரவாரங்கள்
தரம் தாழ்ந்த எதிர் விளைவுகள்
வியாபாரிகளின் பேராசை வெறியாலும்,
கலாச்சாரக் காவலர்களின் பொறாமை வெறியாலும்
காதல் கருகிச் சாவதா?

காதலர் தினம் கொண்டாடுவோம்...
சந்தைகளில் சிறைப்பட்ட காதலை
சண்டைகளில் சிதையுண்ட காதலை
விடுதலை செய்ய வேண்டும் - புது
விதிகளை வகுக்க வேண்டும்
அந்த விடுதலை நாளை
காதலர் தினமாகக் கொண்டாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.