2012-02-14 14:59:23

கம்யூனிச அரசால் கைப்பற்றப்பட்டிருந்த கத்தோலிக்கக் கோவில் மீண்டும் வழிபாட்டுத் தலமாக மாற்றம் பெறுகிறது


பிப்.14,2012. உக்ரைன் நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிச அரசால் கைப்பற்றப்பட்டிருந்த கத்தோலிக்கக் கோவில் ஒன்றை மீண்டும் ஒரு வழிபாட்டுத் தலமாக மாற்றும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
அந்நாட்டில் Dnipropetrovsk என்ற ஊரில் இருந்த புனித யோசேப்பு ஆலயம் கம்யூனிச அரசால் கைப்பற்றப்பட்டு, 1949ம் ஆண்டு ஒரு நூலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. கோவில் என்ற எண்ணத்தை அழிக்கும் ஒரு முயற்சியாக, அக்கோவிலின் முகப்பை அரசு மாற்றி அமைத்திருந்தது.
கடந்த இருபது ஆண்டுகளாக தலத்திருஅவைக்கும் அரசுக்கும் இடையே இக்கோவிலின் உரிமை குறித்து நிலவிவந்த வழக்கு தலத்திருஅவைக்குச் சாதகமாக முடிவடைந்ததால், கோவிலைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
'கம்யூனிசத்தின் நினைவுச் சின்னம்' என்று அரசால் அழைக்கப்பட்ட இக்கோவில் மீண்டும் திருஅவையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல அடையாளம் என்று கப்பூச்சின் துறவு சபைத் தலைவரான அருள்தந்தை Grzegorz Romanowicz கூறினார்.
Aid to the Church in Need போன்ற பிறரன்பு நிறுவனங்கள் வழங்க முன்வந்துள்ள நிதி உதவிகளைக் கொண்டு இக்கோவிலின் முகப்பில் அரசு செய்திருந்த மாற்றங்களைக் களைந்து மீண்டும் இதனை ஒரு கோவிலாக மாற்றும் முயற்சிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என்று அருள்தந்தை Romanowicz எடுத்துரைத்தார்.
புதுப்பிக்கப்பட்டு வரும் புனித யோசேப்பு ஆலயம், 60,000 கத்தோலிக்கர்களைக் கொண்ட Kharkiv - Zaporizhia மறைமாவட்டத்தைச் சேர்ந்தது.








All the contents on this site are copyrighted ©.