2012-02-13 15:35:35

வாரம் ஓர் அலசல் – ஏதாவது புதிதாகச் சிந்தியுங்கள்


பிப்.13,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுஜெர்சி மாநிலத்திலுள்ள பிரின்ஸ்டன் (Princeton) ஆய்வுப் பல்கலைக்கழகத்தில், அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஓர் உயர்ந்த பதவியில் வேலையில் அமர்ந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில், பொறுப்பாளர்கள் அவரிடம் வந்து, “உங்களின் சிறப்பான பணிக்கு எது தேவை என்று சொல்லுங்கள். எதுவானாலும் ஏற்பாடு செய்து தருகிறோம்” எனப் பணிவோடு கேட்டார்கள். அதற்கு அவர், “என் பணி சிறக்க அடிப்படைத் தேவை ஒன்றுதான், அதுதான் குப்பைக்கூடை; அதை உடனே ஏற்பாடு செய்யுங்கள்” எனச் சொன்னார். அங்கு நின்றவர்கள் அவரை வியந்து பார்த்தனர். அவர்களிடம் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன், “எனது ஆராய்ச்சி வாழ்க்கையில் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறேன். அவற்றைக் கிழித்துத் தூக்கிப் போடுவதற்கு ஓர் இடம் வேண்டாமா?” என்று விளக்கினார். 1879ம் ஆண்டு பிறந்த இந்த நொபெல் இயற்பியல் விருதாளர் பேசுகிறார்
ஒருமுறை, இரண்டுமுறைகள் அல்ல, பல தடவைகள் சொதப்புகிறவர்கள்தான் வாழ்க்கையில் அதிகம் சாதிக்கிறார்கள், பெரிய பெரிய கண்டுபிடிப்பாளர்களாய், மேதைகளாய்ப் புகழ் பெறுகிறார்கள் என்பது வரலாறு. “முயற்சி செய்யத் தவறுதல், தவறுவதற்கு முயற்சிப்பதாகும்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அறிவியல், பொருளாதாரம், வணிகம், ஆன்மீகம், என எல்லாத் துறைகளிலுமே மேதைகளாகப் போற்றப்படுகிறவர்கள், வாழ்க்கையில் ஏதாவது ஒரு வழியில் முயற்சி செய்து கொண்டே இருந்தவர்கள். ஏதாவது புதிது புதிதாகச் சிந்தித்துக் கொண்டே இருந்தவர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள்தான் இன்றும் புதிது புதிதாகக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மேதைகள் எந்தச் சவாலையும் துணிவுடன் எதிர் கொள்கிறவர்கள்.
பிப்ரவரி 11ம் தேதி, கடந்த சனிக்கிழமையன்று, கண்டுபிடிப்புக்களின் கதாநாயகனான தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) அவர்களின் பிறந்த நாளை இவ்வுலகம் சிறப்பித்தது. இவரது வாழ்வில்கூட எத்தனையோ சவால்கள். எடிசன், மின்விளக்கைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்த போது, உணவை மறந்தார், உறக்கத்தை மறந்தார், ஏன் உலகையே மறந்தார். இறுதியில் ஒரு நாள் நள்ளிரவில் கண்டுபிடித்தே விட்டார். துள்ளிக் குதித்தார். யாரிடமாவது காட்ட வேண்டுமென்ற ஆர்வத்தில், தூங்கிக் கொண்டிருந்த மனைவியைத் தட்டி எழுப்பி, எரியும் விளக்கைப் பெருமிதத்துடன் காட்டினார். ஆனால், தூக்கம் கலையாத மனைவி, எரிச்சலுடன், “முதலில் விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள். எதுவானாலும் காலையில் பேசிக் கொள்ளலாம்” என்றாராம். 1847ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் Milan ல் பிறந்த எடிசன், மின்விளக்கு மட்டுமல்லாமல், டெலகிராப், மின்கலம், சிமென்ட், நிலக்கரி, புகைப்படக் கருவி, ஒலிநாடா உள்ளிட்ட ஏராளமானவைகளைக் கண்டுபிடித்தவர். இவர் அமெரிக்காவில் மட்டும் தன் பெயரில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களைப் பதிவு செய்துள்ளார். முதல் கண்டுபிடிப்பில் இவர் ஊக்கம் இழந்திருந்தால் அடுத்தடுத்து இத்தனை கண்டுபிடிப்புக்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்க முடியாதே. எடிசன் பேசுகிறார்....
பிப்ரவரி 13, இத்திங்கள், முதல் அனைத்துலக வானொலி தினம். இவ்வுலக தினத்தில் வானொலியைக் கண்டுபிடித்த குலியெல்மோ மார்க்கோனியையோ (Guglielmo Marconi), அவர் வடிவமைத்த வத்திக்கான் வானொலியையோ மறப்பது கடினமே. இந்த பிப்ரவரி 12, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் வானொலியும் தனது எண்பது ஆண்டுகள் பணியில் நிறைவு கண்டது. தினமும் 45 மொழிகளில் ஒலிபரப்பை நடத்தி வரும் இவ்வானொலி, வானலை வழியாக மட்டுமல்லாமல், இன்டர்னெட் பன்வலை அமைப்பு மூலமாகவும், விண்கோள் மூலமாகவும் ஒலிபரப்பை நடத்தி வருகிறது. 1931ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி வத்திக்கான் வானொலி தனது முதல் ஒலிபரப்பைத் தொடங்கிய போது, முதலில் பேசியவர் மார்க்கோனி. திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்களை வானொலியில் பேச அழைத்தார் மார்க்கோனி. அன்று அவர் பேசியதைக் கேட்போம்.....
1874ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி இத்தாலியின் பொலோஞ்ஞோ நகரில் பிறந்த மார்க்கோனி, தன் இல்லத்திலும் தனியே ஆய்வுகளைச் செய்து வந்தார். 'எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும்' என்ற கருத்தை, தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894ம் ஆண்டில் மின்அலைகள் மூலமாக சைகைகளை (சிக்னல்) அனுப்பிக் காட்டினார். வானொலி அலைகளைக் கொண்டு 'கம்பியில்லாத் தந்தி முறை'யை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி முயற்சி செய்து, 1895 ம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய 'திசை திரும்பும் மின்கம்பம்' (Directional Antenna) என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். இந்த அவரின் அரிய முயற்சியில் இத்தாலிய அரசு எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. ஆயினும் மார்க்கோனி தளர்ச்சியடையவில்லை. அவர் இலண்டன் சென்று தனது ஆய்வை விளக்கினார். அங்கே அவருக்கு ஊக்கம் கிடைத்தது. மார்க்கோனி பேசுகிறார்.....
அன்பர்களே, பொதுவாக, கண்டுபிடிப்பாளர்கள், ஒன்றைக் கண்டுபிடித்தவுடன் அத்தோடு தங்களது ஆய்வுப் பணிகளை நிறுத்திக் கொள்வதில்லை. அதிலேயே தொடர்ந்து புதிது புதிதாக ஏதாவது கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார்கள். உலக வரலாற்றில் கண்டுபிடிப்புக்கள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. புதிய கண்டுபிடிப்புக்கள் பற்றிக் கடந்தவாரத்தில் வெளியான சில தகவல்களைக் கேட்போமே.
பனி உறைந்த நிலையில் இருக்கும் தென்துருவப் பகுதியான அண்டார்ட்டிக்காவில், இரண்டு கோடி ஆண்டுகளாக பனிக்கட்டிக்கு அடியில் மறைந்திருக்கும் ஏரி ஒன்றை, இரஷியாவின் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக்கா ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு உறைந்து கிடக்கும் பனிக்கட்டியை எந்திரம் மூலம் சுமார் 3,768 மீட்டர் ஆழத்துக்குத் துளையிடும் தங்களது திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அந்த ஏரியில், பிராணவாயு இருப்பதாகவும், சில நுண்ணிய உயிரினங்கள் வாழ்வதாகவும் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பனிப்படலங்களுக்கு கீழே 300 க்கும் அதிகமான ஏரிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. (பிப்.9,2012)
வடகிழக்குச் சீனாவில் 16.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சிப் படிமம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச மற்றும் Bristol பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் அரிய கண்டுபிடிப்பாகும். இந்தப் பூச்சி உற்சாகமான ஒலிக்குச் சொந்தமானது என்றும், அந்த ஒலிதான் உலகின் மிகத் தொன்மையான Acropolis இன்னிசைக்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. (பிப்.9,2012)
இஸ்பெயின் நாட்டின் தென் மாநிலமான Andalusia விலுள்ள Nerja குகைகளில் 42 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்பெயின் நாட்டின் கார்டோபா பல்கலைக்கழக குழுவினர், பேராசிரியர் Jose Luis Sanchidrian என்பவரின் தலைமையின் கீழ் நடத்திய ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.(பிப்.9,2012)
செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்பதை பிரிட்டனிலுள்ள Exeter பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ் செடியானது, ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப்பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒருவித வாயுவை வெளியேற்றி, ஒலியை ஏற்படுத்தி பக்கத்தில் உள்ள செடியை எச்சரிக்கை செய்கிறதாம். (பிப்.8,2012)
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரினங்கள் வாழும் எரிமலை, ஆஸ்திரேலியக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இது கடலுக்கடியிலிருந்து 200 மீட்டர் மேல் எழும்பி உள்ளதாகவும், தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், ஆனால், இதில் உயிர்வாழ் பொருட்கள் நிறைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர் (பிப்.8,2012)
அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிஃபோர்னிய மாநிலத்தின் Olancha என்ற நகருக்கு அருகில் ஐந்து இலட்சம் ஆண்டுகள் பழமையுடைய கனிமப்பாறை, 1961ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
அன்பர்களே, ஒவ்வொரு வாரமும் வெளியாகும் புதிய புதிய கண்டுபிடிப்புக்களைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இவைகள் பற்றி நாம் வாசிக்கும் போது இவை நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு போய் விடுகின்றன. வேலை இல்லை, வியாபாரம் சரியாகப் போகவில்லை, விளைச்சல் சரியில்லை, காலநிலை சரியில்லை... இப்படி சரியில்லை சரியில்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பதற்குப் பதிலாக, நீங்களும் ஏதாவது புதுசா புதுசா யோசிக்கலாமே. “முயற்சி செய்யத் தவறுதல், தவறுவதற்கு முயற்சிப்பதாகும்” என்று சொல்கிறார்கள். விடாமுயற்சியும் பயிற்சியுமே வெற்றியைக் கொண்டு வரும். சிறகை நம்பும் பறவை, சிகரத்தையும் தாண்டி பறப்பது போல, உங்கள் திறமையை நம்பி, அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நீங்களும் தினம் தினம் புதிய புதிய சிகரங்களைத் தாண்டலாம், புதிய புதிய சாதனைகளைச் சாதிக்கலாம். வரலாற்று ஏட்டில் பெயர்களைப் பதிக்கலாம். உலகினர் கண்களும் உங்கள் பக்கம் திரும்பும். எல்லாம் உங்கள் நம்பிக்-கைகளில். எனவே சிந்தியுங்கள் ஏதாச்சும் புதுசா.








All the contents on this site are copyrighted ©.