2012-02-13 15:33:19

கவிதைக் கனவுகள்..... பனிமழை ஞானம்


பனிமழை பனிமழை
பரவசமூட்டும் பனிமழை
பஞ்சாய்க் கொட்டும் பனிமழை
பச்சிளம் குழந்தைக்கு பரவசமூட்டும் பனிப்பந்து விளையாட்டு
பாய்ந்தோடும் இளையோர்க்குப் பனிச்சறுக்கல் விளையாட்டு - ஆனால்
பளிங்குக் கல்லாய் பளிச்சிடும் பனி
தள்ளாத முதியோர்க்கு கால் சறுக்கும் ஆபத்து
பனிமழை
மொத்தத்தில்
மெல்லப் போ, பாத்துப் போ – என
எல்லாருக்கும் போதிக்கும் நல் ஆசான்.
நிதானத்தைக் கற்றுத்தரும் ஞானி.
நிதானம் தேவை என்றும் நல்வாழ்க்கைக்கு.

பனிமழை பனிமழை என்றே பேச்சு ஐரோப்பாவில்
இத்தாலியும் பால்கனும்
கடும் பாதிப்பு
கொட்டுகிறது பனிமழை
காணுமிடமெல்லாம் பனிக்குன்றுகள்
பல்லாயிரக்கணக்கில் கிராமத்தவர்
பரிதவிப்பு, வீட்டுக்குள் சிறை வாழ்வு
விமானங்கள் இரத்து
பயணிகள் தவிப்பு
மருந்துகள் இல்லை மின்சாரம் இல்லை
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்
மீட்டர்கள் உயரப் பனியில்
உறைய வைக்கும் குளிரில்
தன்னார்வத் தொண்டர்களின் சேவை
அரசுப் பணியாளரின் அயராப் பணி
ஆச்சர்யப்பட வைக்கிறது

மனிதர் துயரம், மனிதத்தின் பிறப்பு.
பனிமழை
மனிதரில் மனிதத்தை
தூண்டியுள்ள ஞானி

மனிதரில் மனிதத்தை விதைக்க
பனிமழையும் பூகம்பமும் சுனாமியுமா வரவேண்டும்!
இதுவரை எவ்விதமோ, போகட்டும் – ஆனால்
இந்நொடியிலிருந்து
உறங்கும் உள்மனங்கள் உயிர்பெறட்டும்!








All the contents on this site are copyrighted ©.