2012-02-11 13:47:57

துன்புறும் தனது உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சமுதாயம், மனிதாபிமானமற்றது : திருத்தந்தை


பிப்.11,2012. நோயாளிகளுக்குச் சிறப்புக் கவனம் தேவைப்படுகின்றது என்பதை இறைமக்கள் சமுதாயத்துக்கு எடுத்துரைக்கவும், துன்பத்தின் மதிப்பை நோயாளிகள் உணர்ந்து கொள்வதற்கு மற்றவர் உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் உலக நோயாளர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட உலக நோயாளர் தினம் குறித்துப் பேசிய, திருப்பீட நலவாழ்வுப்பணி அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, இந்நோயாளர் தினம், லூர்து அன்னை விழாவன்று சிறப்பிக்கப்படுவதன் நோக்கத்தையும் விளக்கினார்.
துன்பத்துக்கும் துன்புறுவோருக்கும் இடையே இருக்கும் உறவை வைத்து மனித சமுதாயத்தின் உண்மையான தன்மை அளக்கப்படுகிறது என்றும், துன்புறும் தனது உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவ முடியாத ஒரு சமுதாயம், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சமுதாயம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியிருப்பதையும் (Spe Salvi), பேராயர் சுட்டிக் காட்டினார்.
மேலும், நலவாழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வப் பணியாளர்கள், கிறிஸ்தவச் சமூகங்கள், துறவறக் குழுமங்கள் போன்ற அனைவரையும் இவ்வுலக தினம் ஊக்கப்படுத்துகின்றது என்றும் பேராயர் Zimowski கூறினார்.
உலக நோயாளர் தினம், லூர்து அன்னை விழாவான பிப்ரவரி 11ம் தேதியன்று சிறப்பிக்கப்பட வேண்டுமென்று, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், 1992ம் ஆண்டில் அறிவித்தார். எனவே, இவ்வுலக தினம், 1993ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.







All the contents on this site are copyrighted ©.