2012-02-11 13:48:26

ஐரோப்பாவில் விசுவாசம் இறக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது - கர்தினால் பஞ்ஞாஸ்க்கோ


பிப்.11, 2012. இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் சார்ந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்க்கோ (Angelo Bagnasco) இக்கருத்தரங்கில் கூறினார்.
"இயேசு நமது காலத்தவர்" என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய கர்தினால் பஞ்ஞாஸ்க்கோ, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய இடங்களில் கிறிஸ்தவத்தின் புத்துணர்ச்சி, உணரக்கூடியதாய் இருக்கின்றது என்று கூறினார்.
ஆனால், இயேசு கிறிஸ்துவை நம் ஆண்டவரும் மீட்பருமென அறிவிக்கும் அதே ஆர்வத்தை ஐரோப்பிய நாடுகளில் காண முடிவதில்லை எனவும், பிராணவாயு இல்லாத சுடர் போன்று விசுவாசம் இறக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது எனவும் கூறினார் கர்தினால் பஞ்ஞாஸ்க்கோ.
ஐரோப்பிய நாடுகளில் இயேசுவைப் பற்றிப் பேசுவதற்கே தயக்கம் இருப்பது போல் தெரிவதாகவும் உரைத்த அவர், இயேசு என்ற மனிதர் குறித்து இக்கருத்தரங்கு நடைபெற்றதற்குத் தனது பாராட்டையும் தெரிவித்தார்.
உரோமையில் நடைபெற்ற இப்பன்னாட்டுக் கருத்தரங்கு, இச்சனிக்கிழமை நிறைவடைந்தது.







All the contents on this site are copyrighted ©.