2012-02-11 13:46:45

அனைத்துலக வானொலி தினத்தைச் சிறப்பிக்க உலக நாடுகளுக்கு யுனெஸ்கோ அழைப்பு


பிப்.11,2012. கல்வியறிவுக்கும், பேச்சு சுதந்திரத்திற்கும், பொது விவாதத்திற்கும் வானொலி நற்சேவையாற்றி வருகிறது என்பதைக் கொண்டாடும் விதமாக, இத்திங்களன்று முதன்முறையாக அனைத்துலக வானொலி தினம் கடைபிடிக்கப்படவிருக்கின்றது என்று யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் அறிவித்தது.
வேகமாக மாறி வரும் இவ்வுலகில், மக்களையும் சமூகங்களையும் இணைப்பதற்கும், தகவல்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கும், புரிந்து கொள்ளுதலை வளர்ப்பதற்கும் வானொலியைப் பயன்படுத்துமாறு யுனெஸ்கோ இயக்குனர் Irina Bokova, இவ்வுலக தினத்திற்கானச் செய்தியில் கேட்டுள்ளார்.
உலகின் மக்களில் 95 விழுக்காட்டினரைச் சென்றடைவதற்கும், போக்குவரத்து வசதிகள் குறைந்த இடங்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்குச் செய்திகளை எளிதாகக் கொண்டு சேர்ப்பதற்கும் வானொலி சிறந்த ஊடகமாக இருக்கின்றது என்றும் அச்செய்தி கூறுகிறது.
உலகில் சுமார் நூறு கோடிப் பேருக்கு வானொலி வசதி கிடையாது, எடுத்துக்காட்டாக, நேபாளத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள், வானொலி கேட்க முடியாத இடங்களில் வாழ்கின்றனர் என்றும் யுனெஸ்கோ கூறியது.
1946ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி ஐ.நா. வானொலி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கும் 15 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது, 1931ம் பிப்ரவரி 12ம் தேதியே, வானொலியைக் கண்டுபிடித்த குலியெல்மோ மார்க்கோனி அவர்களால் வத்திக்கான் வானொலி துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது








All the contents on this site are copyrighted ©.