2012-02-11 13:48:11

அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவத்திற்குப் பலர் மனம் மாறுகின்றனர் - ஹாங்காங் கர்தினால் Zen


பிப்.11,2012. தூயவர்கள் மற்றும் துன்புறும் மக்கள் வழியாக, இயேசு எனது காலத்தவராய் இருக்கிறார் என்று ஹாங்காங் முன்னாள் ஆயர் கர்தினால் Joseph Zen Ze-kiun கூறினார்.
"இயேசு நமது காலத்தவர்" என்ற தலைப்பில் இத்தாலிய ஆயர் பேரவையின் கலாச்சார ஆணையம் உரோமையில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Zen, ஷங்காய் மற்றும் ஹாங்காங்கில் தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சீனாவில் குருத்துவக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கும் காலத்தில் தனக்குக் கிடைத்த அனுபவம், சீனத் திருஅவையின் ஆழமான விசுவாசம், அத்திருஅவை எதிர்கொள்ளும் இன்னல்கள் போன்றவைகளையும் இக்கருத்தரங்கில் எடுத்துக் கூறினார்.
மறைந்த Xian ஆயர் Anthony Li Duan எதிர்கொண்ட சில இன்னல்களைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Zen, திருத்தந்தை 2ம் ஜான் பால், சீன மறைசாட்சிகளைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார் என்பதற்காக, அத்திருத்தந்தைக்கு எதிரான ஆவணத்தில் கையெழுத்துப் போடுவதற்காக பெய்ஜிங் கூட்டத்திற்குச் செல்ல மறுத்தது, திருஅவைச் சட்டத்துக்குப் புறம்பான ஆயர் திருநிலைப்பாட்டிற்குச் செல்ல மறுத்தது என, ஆயர் Duan சந்தித்த நெருக்கடி நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டினார்.
அரசின் அடக்குமுறைகள், அழுத்தங்கள் போன்றவைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவத்திற்குப் பலர் மனம் மாறுகின்றனர் என்றும், ஒவ்வோர் ஆண்டும் வயது வந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்குப் பெறுகின்றனர் என்பதையும் குறிப்பிட்டார் கர்தினால் Zen.
ஏறக்குறைய 70 இலட்சம் மக்களைக் கொண்ட ஹாங்காங்கில், 3 இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கத்தோலிக்கர்.







All the contents on this site are copyrighted ©.