2012-02-09 15:56:10

வத்திக்கான் அதிகாரி : அமைதி காக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக திருஅவை போராட வேண்டும்


பிப்.09,2012. அமைதி காக்கும் ஒரு கலாச்சாரத்திற்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள திருஅவை போராட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்தார்.
கடந்த நான்கு நாட்களாக உரோம் கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அகில உலகத் திருஅவை கருத்தரங்கில் இப்புதனன்று உரையாற்றிய திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் அதிகாரியாகப் பணிபுரியும் பேரருள் தந்தை Charles J. Scicluna, இவ்வாறு கூறினார்.
நீதியின் அடிப்படையாக இருப்பது உண்மை என்பதால், உண்மையைப் பேசாமல் இருப்பது நீதிக்கும் புறம்பானது என்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் கூறியதைச் சுட்டிக் காட்டிப் பேசிய அருள்தந்தை Scicluna, பாலியல் வன்முறைகள் நடைபெற்றபோது அமைதிகாத்தது இத்தவறு வளர்வதற்கு பெரும் காரணமாக இருந்தது என்று எடுத்துரைத்தார்.
சிறுவர் மற்றும் வலுவற்றோர் நடுவில் பாலியல் வன்முறைகள் நடைபெறுவதைத் தடுக்கவும், இத்தவறுகளுக்கு சரியான தீர்வுகள் காணவும் திருஅவையின் ஒவ்வொரு மறைமாவட்டமும் இவ்வாண்டு மேமாதத்திற்குள் விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்ற திருஅவையின் அறிவிப்பை, கருத்தரங்கில் கூடியிருந்த அனைவருக்கும் கூறினார் அருள்தந்தை Scicluna.
திருத்தந்தையர்கள் இரண்டாம் ஜான்பால் மற்றும் 16ம் பெனடிக்ட் இருவரும் இப்பிரச்சனையைத் தீர்க்க எடுத்துக்கொண்ட முயற்சிகளை அருள்தந்தை Scicluna கூடியிருந்த அனைவருக்கும் விளக்கினார்.







All the contents on this site are copyrighted ©.