2012-02-09 15:58:52

கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது - அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர்


பிப்.09,2012. திருமண உறவைத் தகுந்த வகையில் காப்பதற்கு மக்கள் அளித்துள்ள முடிவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் கூறியுள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தில் ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்கும் ஒரு முயற்சியாக அம்மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் கணிப்பில் பெரும்பான்மையான மக்கள் ஓரினத் திருமணத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
மக்கள் அளித்த கருத்தை மாநில அரசு ஏற்கத் தேவையில்லை என்று கலிபோர்னியாவின் நீதி மன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் குரலுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள ஒரு பெரும் தாக்குதல் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவரும், அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான நியூயார்க் பேராயர் Timothy Dolan இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அண்மையில் வெளியிட்ட நலவாழ்வு குறித்த ஒரு திட்டத்திற்கு எதிராக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 183 மறைமாவட்டங்களில் 169 மறைமாவட்ட ஆயர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பை மக்கள் வரிப்பணத்தில் இணைப்பதற்கு அரசு வெளியிட்டுள்ள இத்திட்டத்திற்கு அமெரிக்க ஆயர் பேரவையும் தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.